search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவீன வசதிகளுடன் சதாப்தி ரெயில் பெட்டி வடிவமைப்பு
    X

    நவீன வசதிகளுடன் சதாப்தி ரெயில் பெட்டி வடிவமைப்பு

    ஸ்வர்ண சதாப்தி திட்டத்தின் கீழ் கேமராக்கள், பிரெய்லி குறியீடு, தானியங்கி கதவுகள் என சதாப்தி ரெயிலில் உள்ள பெட்டிகள் நவீன வசதிகளுடன் தெற்கு ரெயில்வே மேம்படுத்தி வருகிறது.
    சென்னை:

    இந்தியன் ரெயில்வே சார்பில் நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட ‘சதாப்தி’ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களின் பெட்டிகளை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் பயணிகளை கவரும் வகையில் ரெயில்வே அமைச்சகம் மேம்படுத்தி வருகிறது. அதன்படி, தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்படும் சென்னை சென்டிரல்-மைசூரு மற்றும் சென்னை சென்டிரல்-கோவை சதாப்தி ரெயில்களின் பெட்டிகளும் மேம்படுத்தப்படுகின்றன.

    சென்னை சென்டிரல்-மைசூரு சதாப்தி ரெயிலில் இணைப்பதற்காக சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் நவீன வசதிகளுடன் ஒரு பெட்டி மேம்படுத்தப்பட்டுள்ளது. இது தெற்கு ரெயில்வேயில் சதாப்தி ரெயிலுக்காக மேம்படுத்தப்பட்டுள்ள முதல் பெட்டி ஆகும். இந்த பெட்டி சென்னை சென்டிரலில் இருந்து மைசூருக்கு இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு இயக்கப்பட உள்ள சதாப்தி ரெயிலில் இணைக்கப்பட உள்ளது.

    ஸ்வர்ண சதாப்தி (தங்க சதாப்தி) என்று பெயரிடப்பட்டுள்ள இருக்கை வசதிக்கொண்ட இந்த ஏ.சி. பெட்டியில், 3 கண்காணிப்பு கேமராக்கள், வை-பை, தானியங்கி கதவுகள், எல்.இ.டி. விளக்குகள், உள்புற அலங்காரம், பயணிகள் உடைமைகளை வைப்பதற்கு இட வசதி, லேப்-டாப் வைப்பதற்கு இருக்கைகளின் பின்னால் தனி வசதி, நறுமணம் வீசும் ஸ்பிரே, தமிழ்நாடு சுற்றுலா இடங்கள் தொடர்பான படங்களும் இடம்பெற்றுள்ளன.

    இதுதவிர தீயணைப்பு தடுப்பான்கள், பார்வையற்றவர்கள் இருக்கைகளை கண்டுபிடிக்க மற்றும் பெட்டியின் உள்ளே நுழையும் தானியங்கி கதவிலும் பிரெய்லி குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து, சென்னை கோட்ட மூத்த மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆர்.பரிமளகுமார், உதவி கோட்ட மெக்கானிக்கல் என்ஜினீயர் துஷார் ஆதித்யா மற்றும் பேசின்பிரிட்ஜ் பணிமனை ரெயில் பெட்டி பிரிவு தலைமை அதிகாரி ஏ.சுரேஷ் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சதாப்தி ரெயில் பெட்டிகள் ரூ.2 கோடியே 80 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் ஸ்வர்ண சதாப்தி ரெயில் பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன. ஒரு பெட்டியை மேம்படுத்துவதற்கு ரூ.10 லட்சம் செலவாகிறது. சென்னை-மைசூரு சதாப்தி ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் ஸ்வர்ண சதாப்தி பெட்டிகளாக வருகிற மார்ச் மாதத்துக்குள் மாற்றம் செய்யப்படும்.

    இதையடுத்து சென்னை சென்டிரல்-கோவை சதாப்தி ரெயில் பெட்டிகள் மேம்படுத்தப்படும். இதற்கு ஏப்ரல் மாதம் நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். மேம்படுத்தப்பட்ட இந்த பெட்டிகள் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று கருதுகிறோம்.

    இந்த ரெயில் பெட்டியில் உள்ள வை-பை மூலம் பயணிகள் இலவசமாக தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உள்ள படங்களை பார்க்கலாம். பாடல்களையும் கேட்கலாம். சிறுவர்-சிறுமியருக்காக கார்ட்டூன் படங்களும் உள்ளன. மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து ரெயில் பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    Next Story
    ×