search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களிப்பதை கட்டாயப்படுத்தக்கோரிய மனு தள்ளுபடி: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    வாக்களிப்பதை கட்டாயப்படுத்தக்கோரிய மனு தள்ளுபடி: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    வாக்களிப்பதை கட்டாயப்படுத்தக்கோரி தொடரப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்த அபிமனி என்ற சந்திரசேகரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    அதில், தற்போதைய சூழலில் அரசியல் என்பது சரியான நிலையில் இல்லை. தேர்தல்கள் மூலம் முறையான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதும் இல்லை.

    ஓட்டுக்கு பணம் வழங்குவது, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வாக்களிக்க வற்புறுத்துவது என வேட்பாளர் தேர்வுக்கு வாக்களிப்பதே முறையாக நடைபெறுவதில்லை. இதனால் உரிய நபர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை.

    தகுதியற்ற நபர்கள் தேர்வு செய்யப்படுவதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே வேட்புமனு தாக்கல் செய்பவர்களில் 10 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். பிறருக்கு அவர்கள் டெபாசிட் செய்த பணத்தை திருப்பி வழங்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களை ஊடகங்கள் மூலமாக அறிமுகம் செய்ய வேண்டும். வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

    இதனால் ஓட்டுக்கு பணம், அன்பளிப்புகள் வழங்குவது தடுக்க வாய்ப்பாக அமையும். அரசே ஏற்பாடு செய்து வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி, அங்கே அவர்களது பிரசாரத்தை முன்வைக்க வேண்டும்". இவற்றை முன்னிறுத்தி, உரிய நடவடிக்கை கோரி தொடர்புடைய அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் கடந்த டிசம்பர் 15-ல் மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை இல்லை.

    இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வாக்கு சேகரிக்கும் மற்றும் வாக்களிக்கும் முறையில் மாற்றம் கொணர்ந்தால் தகுதியான நபர்களை தேர்வு செய்யவும், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியாக அமையும். ஆகவே, வாக்களிப்பதை கட்டாயமாக்கவும், மத்திய சட்ட மற்றும் நீதி அமைச்சக செயலரும், இந்திய சட்ட ஆணைய தலைவரும் வாக்களிக்கும் முறையை மாற்றுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், அதனடிப்படையில் மாற்றம் கொணருவது குறித்து குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வு, இந்திய தேர்தல் ஆணையம், ஜனநாயகத்தை காக்கும் வகையில் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #Tamilnews
    Next Story
    ×