
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு முதல் நாள் நாம் போகிப் பண்டிகை கொண்டாடுகிறோம். இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பது என்பது பழையன கழிதல் என்ற வழக்கத்திற்கான அடையாளமாகும்.
இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். பெரும்பாலும், நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச் சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.
ஆனால், தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்கையில் நச்சுப் புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட வெவ்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நச்சு காற்றாலும், கரி புகையாலும் காற்று மாசுபட்டு நம் நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது.
நச்சுப் புகை கலந்த பனி மூட்டத்தால் ஆகாய விமானங்கள் புறப்படுவதற்கும், சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது. இது போன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும் உயர்நீதி மன்றம், பழைய மரம், வரட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது.
இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை போலீசார் மூலம் எடுக்கப்படும். எனவே, போகிப் பண்டிகையன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews