search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய சுகாதார செயலாளருக்கு நோட்டீஸ்
    X

    எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய சுகாதார செயலாளருக்கு நோட்டீஸ்

    எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய சுகாதார செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மதுரை:

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

    இதேபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிடக்கோரி ஆர்.கே.பாஸ்கர் என்பவர் தனி பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தகுதியான இடத்தை தேர்வு செய்ய தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை தகவல் அளிக்கவில்லை என மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பெருந்துறை (ஈரோடு), செங்கல்பட்டு (காஞ்சீபுரம்), தோப்பூர் (மதுரை), செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) ஆகிய இடங்கள் தேர்வு செய்யப் பட்டு மத்திய அரசுக்கு 31.10.2014ல் பட்டியல் அனுப்பப்பட்டது.

    இந்த இடங்களை மத்திய குழு ஆய்வு செய்துள்ளது. இந்த 5 இடங்களில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ந்தேதி நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய துணைக்குழு 5 இடங்களிலும் ஆய்வு நடத்தி 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக 1.1.2018ல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஆனால் புத்தாண்டு தினத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

    இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றாததால் மத்திய அமைச்சரவை செயலர் பிரிதீ சுதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    அதில், “உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கோரி அமைச்சரவை செயலருக்கு 2.1.201 7-ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பிறகும் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

    இதனால் அமைச்சரவை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    Next Story
    ×