search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவரை உயிரோடு ஆற்று மணலில் புதைத்து கொன்றது ஏன்?: கைதான 3 நண்பர்கள் வாக்குமூலம்
    X

    மாணவரை உயிரோடு ஆற்று மணலில் புதைத்து கொன்றது ஏன்?: கைதான 3 நண்பர்கள் வாக்குமூலம்

    தஞ்சை கல்லூரி மாணவரை உயிரோடு ஆற்று மணலில் புதைத்து கொன்றது ஏன்? என்று கைதான 3 நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் நாடார் சாலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். மாநகராட்சி துப்புரவு தொழிலாளி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களது மகன் சரவணன் (வயது 18). கேட்டரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சரவணன் வீடு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெற்றோருக்கு நண்பர்கள் மீது சந்தேகம் ஏற்படவே போலீசாரிடம் புகார் செய்தனர். இதையடுத்து டவுன் டி.எஸ்.பி தமிழ்செல்வன் தலைமையில் தனிப்படை அமைத்து நண்பர்கள் மற்றும் பலரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.


    விசாரணையில் சரவணனை கொலை செய்தது அவரது நண்பர்களான இரட்டை பிள்ளையார் கோவில் சாலையை சேர்ந்த ஆனந்த் (19), கரந்தையை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (19), அஜீத், மற்றொரு நண்பர் சரவணன் ஆகிய 5 பேர் என தெரிய வந்தது.

    இந்த நிலையில் போலீசார் தங்களை நெருங்கியதை அறிந்த தஞ்சை மேட்டு தெருவை சேர்ந்த நந்தகுமார் கரந்தை கிராம நிர்வாக அலுவலர் சிவானந்தனிடம் சரண் அடைந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் சரவணனை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்பு கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆனந்த், நவநீதகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரையும் அழைத்து கொண்டு மாணவர் சரவணனை உயிரோடு புதைத்து கொன்ற கூடலூர் வெண்ணாற்றங்கரைக்கு அழைத்து சென்றனர். அங்கு புதைக்கப்பட்ட சரவணின் உடலை மீட்டனர். 40 நாட்களுக்கு மேலாகி இருந்ததால் வெறும் எலும்புகள் மட்டுமே இருந்தது.

    பின்னர் கைதான 3 பேரும் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கும் சரவணனுக்கும் முன் விரோதம் இருந்தது. அவனை கொல்ல திட்டமிட்டோம். சம்பவத்தன்று எங்களுக்கும் சரவணனுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் சரவணனை அடித்தோம். அதில் சரவணன் சத்தம் போட்டார். அதனால் வாயில் துணி வைத்து கை, கால்களை கட்டி வைத்து அடித்தோம். உடம்பில் காயங்கள் ஏற்பட்டது.

    இதனால் அவனை மாட்டு வண்டியில் தூக்கிப் போட்டு கூடலூர் வெண்ணாற்றங்கரைக்கு கொண்டு சென்றோம். அங்கு தண்ணீர் வராததால் ஆற்றின் மையப்பகுதில் 5 அடி ஆழம் குழி தோண்டி உயிரோடு புதைத்தோம். மற்றொரு சரவணன், அஜித் 2 பேரும் வரவில்லை. எப்படியாவது போலீசார் எங்களை பிடித்து விடுவார்கள் என்று பயந்து கொண்டு இருந்தோம். அதேபோல் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×