search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேஷன்ஸ் லீக்: நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுக்கல்
    X

    நேஷன்ஸ் லீக்: நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுக்கல்

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி போர்ச்சுக்கல் சாம்பியன் பட்டம் வென்றது.
    கால்பந்து விளையாடும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் யூரோ சாம்பியன்ஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அது ‘நேஷன்ஸ் லீக்’ என புதிதாக மாற்றப்பட்டுள்ளது. இதன் லீக், நாக் அவுட் சுற்றுகள் முடிவில் போர்ச்சுக்கல் - நெதர்லாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    நேற்று நள்ளிரவு போர்ட்டோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சாம்பியன் பட்டம் வெல்ல பலப்பரீட்சை நடத்தின. சொந்த மைதானத்தில் போட்டி நடைபெற்றதால் போர்ச்சுக்கல் அணிக்கு ஆதரவு அதிக அளவில் இருந்தது. இதை பயன்படுத்தி போர்ச்சுக்கல் வீரர்கள் அபாரமாக விளையாடினார்கள். குறிப்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு முறை தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் நெதர்லாந்து கோல் கீப்பர் அதை சிறப்பாக தடுத்தார். மேலும், பல வாய்ப்புகளை அவர் தடுத்தார்.

    நெதர்லாந்து வீரர்கள் முதல் பாதி நேரத்தில் சோபிக்கவில்லை. இதனால் இரு அணிகளும் முதல் பாதி நேரத்தில் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர்கள் விஸ்வரூபம் எடுத்தார்கள். 51-வது நிமிடத்தில் அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பந்து போர்ச்சுக்கல் கோல் கீப்பர் கையில் பட்டு வெளியே சென்றது.



    ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் குயேடஸ் சிறப்பான வகையில் கோல் அடித்தார். இதனால் போர்ச்சுக்கல் 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் நெதர்லாந்து அணி பலமுறை கோல் அடிக்க முயற்சி செய்தது. இருந்தாலும் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை.

    இதனால் போர்ச்சுக்கல் 1-0 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 2016-ம் ஆண்டு கிறிஸ்டியானோ தலைமையிலான போர்ச்சுக்கல் யூரோ சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×