search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்ச் ஓபன்: ஆஷ்லே பார்ட்டி, வாண்ட்ரவ்சோவா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    X

    பிரெஞ்ச் ஓபன்: ஆஷ்லே பார்ட்டி, வாண்ட்ரவ்சோவா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் 26-ம் நிலை வீராங்கனையான ஜோகன்னா கோன்டாவை வீழ்த்தி செக்குடியரசு வீராங்கனை மார்கேடா வாண்ட்ரவ்சோவா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன.

    முதல் அரையிறுதி போட்டியில் 26-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்துக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் ஜோகன்னா கோன்டா, தரநிலை பெறாத செக்குடியரசின் மார்கேடா வாண்ட்ரவ்சோவாவை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை 7-5 என மார்கேடா வென்றார். 2-வது செட்டில் கோன்டா கடும் நெருக்கடி கொடுத்தார். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் மார்கேடாவும் விளையாடினார். இதனால் 2-வது செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் மார்கேடா 7-5, 7(7)-6(2) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    2-வது அரையிறுதியில் 8-ம் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி, காலிறுதியில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தியிருந்த 17 வயது இளம் வீராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை எதிர்கொண்டார்.

    காலிறுதியில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்த ஆட்டத்திலும் விளையாடினார். இவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் 8-ம் நிலை வீராங்கனையான ஆஷ்லே பேர்ட்டி எதிர் தாக்குதலில் ஈடுபட்டார். இதனால் முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் அமண்டா அனிசிமோவா முதல் செட்டை 7(7) - 6(4) எனக் கைப்பற்றினார்.



    முதல் செட்டை இழந்தபின் சுதாரித்துக் கொண்ட பார்ட்டி 2-வது செட்டில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். அதேபோல் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டிலும் சிறப்பாக விளையாடினார். இதனால் 3-வது செட்டையும் 6-3 எனக்கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடக்க இருக்கும் இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்ட்டி - மார்கேடா வாண்ட்ரவ்சோவா சாம்பியன் பட்டத்தை வெல்ல பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    Next Story
    ×