search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் பேட்டிங் குறித்து கவலைப்பட தேவையில்லை - ரவீந்திர ஜடேஜா
    X

    இந்தியாவின் பேட்டிங் குறித்து கவலைப்பட தேவையில்லை - ரவீந்திர ஜடேஜா

    இந்தியாவின் பேட்டிங் குறித்து கவலைப்பட தேவையில்லை என்று இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறி உள்ளார்.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி நேற்று முன்தினம் லண்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 39.2 ஓவர்களில் 179 ரன்னில் சுருண்டது. முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் ரவீந்திர ஜடேஜா (54 ரன்) மட்டும் ஆறுதல் அளித்தார். இந்த இலக்கை நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

    உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கணிக்கப்பட்டுள்ள இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஆடிய விதம் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இது குறித்து இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த இங்கிலாந்து பயணத்தில் இது தான் எங்களது முதல் ஆட்டம். ஒரு மோசமான இன்னிங்சை வைத்து வீரர்களின் திறமையை எடைபோட்டு விடக்கூடாது. இது ஒரு மோசமான ஆட்டமாக அமைந்தது அவ்வளவு தான். மற்றபடி இந்தியாவின் பேட்டிங் குறித்து கவலைப்பட வேண்டிய தேவையில்லை. அதுவும் பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளங்களில் (இந்தியா) விளையாடி விட்டு இங்கிலாந்துக்கு வந்து விளையாடுவது எப்போதும் கடினமாகத் தான் இருக்கும்.

    தவறுகளை திருத்திக்கொள்ள நமக்கு இன்னும் காலஅவகாசம் உள்ளது. பேட்டிங் திறமையை மேம்படுத்திக்கொள்ள இன்னும் கடினமாக உழைப்போம். எல்லோரிடமும் அனுபவம் உள்ளது. அதனால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    இது வழக்கமான இங்கிலாந்து ஆடுகளங்கள் போன்று இருந்தது. ஆடுகளத்தன்மை தொடக்கத்தில் மிருதுவாக காணப்பட்டது. போக போக நன்றாக இருந்தது. ஆனால் உலக கோப்பை தொடரின்போது இவ்வளவு அதிகமாக புற்கள் உள்ள ஆடுகளங்களை கொடுக்க மாட்டார்கள், பேட்டிங்குக்கு ஏற்ற வகையிலேயே இருக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு ஜடேஜா கூறினார்.

    இதே கருத்தை பிரதிபலித்த இந்திய முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர், ‘ஒவ்வொரு ஆட்டத்தையும் வைத்து நான் அணியை மதிப்பிடுவதில்லை. பெரிய போட்டித் தொடரில் இது போன்று நடக்கத்தான் செய்யும். அதுவும் பிரதான போட்டி இன்னும் தொடங்கவே இல்லை. அதனால் இப்போது அச்சப்பட தேவையில்லை’ என்றார்.
    Next Story
    ×