search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத்தை வீழ்த்தியது - பெங்களூரு அணிக்கு ஆறுதல் வெற்றி
    X

    ஐதராபாத்தை வீழ்த்தியது - பெங்களூரு அணிக்கு ஆறுதல் வெற்றி

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை தோற்கடித்து பெங்களூரு அணி ஆறுதல் வெற்றி பெற்றது. #IPL2019 #SRHvRCB
    பெங்களூரு:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 54-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. ஐதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மாவுக்கு பதிலாக யூசுப் பதான் சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் மூன்று மாற்றமாக ஸ்டோனிஸ், பவான் நெகி, கிளாசென் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹெட்மயர், கிரான்ட்ஹோம், வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்தனர்.

    ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் ஐதராபாத்தை பேட் செய்ய அழைத்தார். இதன்படி மார்ட்டின் கப்திலும், விருத்திமான் சஹாவும் களம் புகுந்து முதல் 4 ஓவர்களில் 44 ரன்களை திரட்டி நல்ல தொடக்கத்தை தந்தனர். ஆனால் தொடக்க ஜோடி பிரிந்ததும் உத்வேகம் தளர்ந்தது. விருத்திமான் சஹா 20 ரன்னிலும், மார்ட்டின் கப்தில் 30 ரன்னிலும், மனிஷ் பாண்டே 9 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். அதன் பிறகு கேப்டன் வில்லியம்சன் அணியை தூக்கி நிறுத்தினார். அவருக்கு விஜய் சங்கர் (27 ரன், 18 பந்து, 3 சிக்சர்) ஓரளவு ஒத்துழைப்பு தந்தார். உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் வில்லியம்சன் 2 பவுண்டரியும், 2 சிக்சரும் சாத்தியதோடு இந்த சீசனில் தனது முதலாவது அரைசதத்தையும் கடந்தார். இதில் வில்லியம்சன் அடித்த ஒரு சிக்சர் நடப்பு தொடரின் 700-வது சிக்சராக பதிவானது.



    20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. வில்லியம்சன் 70 ரன்களுடன் (43 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். பெங்களூரு தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பார்த்தீவ் பட்டேல் (0) முதல் ஓவரிலேயே கேட்ச் ஆனார். கேப்டன் விராட் கோலி (16 ரன்), டிவில்லியர்ஸ் (1 ரன்) ஆகியோரும் வேகப்பந்து வீச்சுக்கு பணிந்தனர். அப்போது அந்த அணி 3 விக்கெட்டுக்கு 20 ரன்னுடன் தள்ளாடியது.

    இதன் பின்னர் ஹெட்மயரும், குர்கீரத்சிங்கும் கூட்டணி போட்டு அணியை நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்தனர். ஹெட்மயரும், குர்கீரத்தும் அரைசதம் நொறுக்கி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். ஸ்கோர் 164 ரன்களை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. ஹெட்மயர் 75 ரன்களிலும் (47 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), குர்கீரத்சிங் 65 ரன்னிலும் (48 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்பினர்.

    பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பெங்களூருவுக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. 8-வது தோல்வியை தழுவிய ஐதராபாத் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகி விட்டது. மும்பைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தால் மட்டுமே ஐதராபாத் அணிக்கு வாய்ப்பு உருவாகும்.

    . #IPL2019 #SRHvRCB
    Next Story
    ×