search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லிக்கு எதிராக அதிரடியாக ஆடியது எப்படி?: எம்எஸ் டோனி விளக்கம்
    X

    டெல்லிக்கு எதிராக அதிரடியாக ஆடியது எப்படி?: எம்எஸ் டோனி விளக்கம்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக அதிரடியாக ஆடியது எப்படி என்று சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் டோனி விவரித்துள்ளார். #CSKvDC #MSDhoni
    ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை மீண்டும் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தை பிடித்தது. சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. கேப்டன் டோனியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 22 பந்தில் 44 ரன் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.

    ரெய்னா 37 பந்தில் 59 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), டு பிளிசிஸ் 41 பந்தில் 39 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ஜடேஜா 10 பந்தில் 25 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சுசித் 2 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ், அக்‌சார் பட்டேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி இம்ரான் தாஹிர், ஜடேஜா பந்து வீச்சில் சரண்டர் ஆனது. அந்த அணி 16.2 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் மட்டுமே தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 31 பந்தில் 44 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்களில் தவானை (19 ரன்) தவிர அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினார்கள். இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும், ஹர்பஜன் சிங், தீபக் சாஹர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 9-வது வெற்றியாகும். இதன் மூலம் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது.

    வெற்றி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:-

    நான் பந்தை சரியாக கணித்து அதிரடியாக விளையாடினேன். 20-வது ஓவர் என்பதால் என்னை நான் அதிகமாக தயார் படுத்திக்கொண்டேன். பந்துகளை ஏற்கனவே அதிகமாக சந்தித்து விட்டதால் கடைசி ஓவரில் அதிரடியை வெளிப்படுத்த முடிந்தது.



    அம்பதி ராயுடு அப்போதுதான் வந்ததால் அவருக்கு சற்று கடினம். இதனால்தான் கடைசி 2 பந்தை நானே சந்தித்து அடித்து ஆட முடிவு செய்தேன். ஆடுகளத்தில் பனித்துளி அதிகமாக உள்ளதா என்பதை நாங்கள் அறிந்து இருந்தோம். எங்களது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் அபாரமாக வீசினார்கள். 170 முதல் 180 ரன் வரை இந்த மைதானத்தில் நல்ல ஸ்கோர் ஆகும். டென்னிஸ் பந்தில் பயிற்சி பெற்றதால் என்னால் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட முடிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 5-ந்தேதி சந்திக்கிறது.

    Next Story
    ×