search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையின் சுழலில் சிக்கிய டெல்லி அணி 99 ரன்னில் ஆல் அவுட்
    X

    சென்னையின் சுழலில் சிக்கிய டெல்லி அணி 99 ரன்னில் ஆல் அவுட்

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியை சுருட்டி எளிதில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.#IPL2019 #CSKvsDC

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 50-வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட சென்னை சூப்பர் கிங்சும், டெல்லி கேப்பிட்டல்சும் மோதின. காய்ச்சல் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத சென்னை கேப்டன் டோனி குணமடைந்து விட்டதால் அணிக்கு திரும்பினார். ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இதனால் முரளிவிஜய், துருவ் ஷோரே, மிட்செல் சான்ட்னெர் கழற்றி விடப்பட்டனர்.


    டெல்லி அணியில் இரு மாற்றமாக லேசான காயத்தால் அவதிப்படும் ரபடா, இஷாந்த் ஷர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டிரென்ட் பவுல்ட், ஜே.சுசித் இடம் பெற்றனர்.

    ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் சென்னை அணியை பேட் செய்ய பணித்தார். இதன்படி ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கினர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இருவரும் மந்தமாக ஆடினர். தடுமாற்றம் கண்ட வாட்சன் 9 பந்தில் ரன் ஏதுமின்றி ஆட்டம் இழந்தார். முதல் 4 ஓவர்களில் சென்னை அணி வெறும் 7 ரன் மட்டுமே எடுத்திருந்தது.

    இதன் பின்னர் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, பிளிஸ்சிஸ்சுடன் கைகோர்த்தார். இருவரும் அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். 8.5 ஓவர்களில் சென்னை அணி 50 ரன்களை தொட்டது. ரூதர்போர்டு, அக்‌ஷர் பட்டேலின் ஓவர்களில் சிக்சர் அடித்த பிளிஸ்சிஸ் 39 ரன்களில் (41 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி அடியெடுத்து வைத்தார்.

    மறுமுனையில சுசித்தின் சுழலில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய சுரேஷ் ரெய்னா (59 ரன், 37 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) அதே ஓவரில் கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து பந்தை தூக்கிய போது கேட்ச் ஆனார். ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் ரெய்னாவின் 50-வது அரைசதமாக இது அமைந்தது. ரெய்னாவைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா வந்தார்.

    டோனி, ஜடேஜா ஜோடியால் இறுதி கட்டத்தில் ஆட்டம் சூடுபிடித்தது. ஜடேஜா 25 ரன்கள் (10 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். டோனியோ, டிரென்ட் பவுல்ட் வீசிய கடைசி ஓவரில் பவுண்டரி, 2 சிக்சரோடு இன்னிங்சை தித்திப்போடு நிறைவு செய்தார்.

    20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் சென்னை பேட்ஸ்மேன்கள் 91 ரன்களை திரட்டினர். டோனி 44 ரன்களுடனும் (22 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), அம்பத்தி ராயுடு 5 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். டெல்லி தரப்பில் சுசித் 2 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ், அக்‌ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து 180 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணி ஆடியது. முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா (4 ரன்) வெளியேற்றப்பட்டார். 2-வது விக்கெட்டுக்கு ஷிகர் தவானும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். ஸ்கோர் 52 ரன்களை எட்டிய போது இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்பிரித்தார். அவரது பந்து வீச்சில் தவான் (19 ரன்) கிளன் போல்டு ஆனார். ஸ்ரேயாஸ் அய்யரை (44 ரன்) ஜடேஜா காலி செய்தார். இம்ரான் தாஹிர், ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஊசலாடிய டெல்லி அணியினர் விக்கெட்டுகளை கொத்து கொத்தாக இழந்தனர்.


    முடிவில் டெல்லி அணி 16.2 ஓவர்களில் 99 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்த சீசனில் டெல்லி அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதன் மூலம் சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, புள்ளி பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியது. சென்னை அணிக்கு இது 9-வது வெற்றியாகும்.

    சென்னை தரப்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

    Next Story
    ×