search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி ஒவரில் வெற்றி
    X

    கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி ஒவரில் வெற்றி

    கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. #IPL2019 #KKRvRR

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் சந்தித்தன. இதில் ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்திலேயே பேரிடி விழுந்தது. 3-வது பந்திலேயே கிறிஸ் லின் (0), வருண் ஆரோனின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லும் (14 ரன்) அவரது பந்து வீச்சிலேயே விக்கெட்டை தாரைவார்த்தார். இதனால் கொல்கத்தாவின் ரன்வேகம் மந்தமானது. அடுத்து வந்த நிதிஷ் ராணாவும் (21 ரன்) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. முதல் 10 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 49 ரன்களுடன் மோசமான நிலையில் தத்தளித்தது.

    4-வது வரிசையில் களம் கண்ட கேப்டன் தினேஷ் கார்த்திக், பிற்பகுதியில் மின்னல் வேகத்தில் ஆடி அதிர வைத்தார். அவர் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் துரத்தியடித்தார். இன்னொரு பக்கம் சுனில் நரின் (11 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (14 ரன்), கார்லஸ் பிராத்வெய்ட் (5 ரன்) கைகொடுக்க தவறினாலும் தினேஷ் கார்த்திக் தனி வீரராக போராடி அணியை தூக்கி நிறுத்தினார். ஜோப்ரா ஆர்ச்சரின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்ட தினேஷ் கார்த்திக், கடைசி ஓவரிலும் பவுண்டரி, சிக்சர்கள் நொறுக்கி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். செஞ்சுரியை எட்ட அவருக்கு கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.




    20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் 75 ரன்களை திரட்டினர். கேப்டன் தினேஷ் கார்த்திக் 97 ரன்களுடன் (50 பந்து, 7 பவுண்டரி, 9 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    அடுத்து 176 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் ரஹானேவும், சஞ்சு சாம்சனும் முதல் 5 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்து அட்டகாசமான தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர். ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ஆட்டத்தின் போக்கு மாறியது. ரஹானே 34 ரன்களிலும் (21 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), சாம்சன் 22 ரன்னிலும் வெளியேறினர். இந்த சீசனில் தனது கடைசி ஐ.பி.எல். ஆட்டத்தில் ஆடிய பென் ஸ்டோக்ஸ் (11 ரன்) ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ஸ்டீவன் சுமித் (2 ரன்), ஸ்டூவர்ட் பின்னி (11 ரன்) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை. இவர்கள் 5 பேரையும் சுழற்பந்து வீச்சாளர்கள் பியூஸ் சாவ்லாவும், சுனில் நரினும் இணைந்து காலி செய்தனர்.

    இந்த சிக்கலுக்கு மத்தியில் இறங்கிய 17 வயதான ரியான் பராக், ராஜஸ்தான் அணியை காப்பாற்றினார். அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பிய ரியான் பராக் 47 ரன்களில் (31 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ‘ஹிட் விக்கெட்’ ஆனார். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரை எதிர்கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர் முதல் பந்தை பவுண்டரிக்கும், அடுத்த பந்தை சிக்சருக்கும் அனுப்பி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் தனது 4-வது வெற்றியை ருசித்தது. ஜோப்ரா ஆர்ச்சர் 27 ரன்களுடன் களத்தில் இருந்தார். கடைசி 6 ஆட்டங்களில் வரிசையாக தோற்றுள்ள கொல்கத்தாவுக்கு மொத்தத்தில் இது 7-வது தோல்வியாகும்.

     #IPL2019 #KKRvRR
    Next Story
    ×