search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி வெற்றிக்கு எனது ஆட்டம் உதவியது மகிழ்ச்சி: 78 ரன் குவித்த ரி‌ஷப் பந்த்
    X

    டெல்லி வெற்றிக்கு எனது ஆட்டம் உதவியது மகிழ்ச்சி: 78 ரன் குவித்த ரி‌ஷப் பந்த்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 78 ரன்கள் குவித்த ரிஷப் பந்த், அணியின் வெற்றிக்கு எனது ஆட்டம் உதவியது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். #IPL2019
    ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 191 ரன் குவித்தது. ரகானே சதம் (101 ரன்) அடித்தார். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 50 ரன் எடுத்தார்.

    பின்னர் விளையாடிய டெல்லி அணி 8.5 ஓவரில் தவான் (54 ரன்), ஷ்ரேயாஸ் அய்யர் (4 ரன்) ஆகியோர் விக்கெட்டை இழந்து 77 ரன் எடுத்து இருந்தது. அடுத்து களம் வந்த ரி‌ஷப் பந்த் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை சிதறடித்தார்.

    அவரது ஆட்டத்தால் டெல்லி 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரி‌ஷப் பந்த் 36 பந்தில் 78 ரன் (6 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    அதிரடி ஆட்டம் குறித்து ரி‌ஷப் பந்த் கூறியதாவது:-

    முக்கியமான ஆட்டத்தில் அணி வெற்றி பெற்றது நல்ல உணர்வை அளிக்கிறது. அதற்கு எனது ஆட்டம் உதவியது மிகுந்த மகிழ்ச்சி அளித்திருக்கிறது. உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யாதது பற்றி எனது மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

    ஆனால் எனது ஆட்டத்தில்தான் முழு கவனம் செலுத்தினேன். எனது திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.



    ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. அதை சரியாக பயன்படுத்தி கொண்டேன். அணியில் முக்கியமான வி‌ஷயம் என்னவென்றால் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை நன்கு உணர்ந்து உள்ளனர். அணியின் உரிமையாளர்கள் எங்களிடம் கூறும்போது, இதுதான் உங்களது பணி. அது படிதான் களத்தில் நடக்கும் என்று கூறினர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறும்போது, ‘‘அணி சரியான பாதையில் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் எங்களுக்கு நம்பிக்கை அதிகரித்து உள்ளது. ராஜஸ்தான் அணி 200 ரன் எடுக்கும் என்று எதிர்பார்த்தோம். கடைசி கட்டத்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் 191 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர். ரி‌ஷப் பந்த் முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாடினார்’’ என்றார்.
    Next Story
    ×