search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூர் அணியுடன் இன்று மோதல்: ‘பிளே ஆப்’ சுற்று ஆர்வத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
    X

    பெங்களூர் அணியுடன் இன்று மோதல்: ‘பிளே ஆப்’ சுற்று ஆர்வத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

    சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேறுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (8 ரன் 4 விக்கெட்), கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (7 விக்கெட், 5 விக்கெட்), ஆகியவற்றை 2 முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (7 விக்கெட்), டெல்லி கேப்பிட்டல்ஸ் (6 விக்கெட்), கிங்ஸ் லெவன் பஞ்சாப் (22 ரன்) ஆகியவற்றை ஒரு முறையும் வீழ்த்தி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் (37 ரன்), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (6 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்று இருந்தது.

    சூப்பர் கிங்ஸ் 10-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மீண்டும் இன்று இரவு 8 மணிக்கு சந்திக்கிறது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்சை மீண்டும் வீழ்த்தி 8-வது வெற்றியுடன் ‘பிளே ஆப்ஸ்’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    முதுகுவலி காரணமாக கேப்டன் டோனி ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அவர் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்தியதை காண முடிந்தது. மிகவும் மோசமாக ஆடி தோற்று இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதுகெலும்பாக திகழும் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுகிறார். டோனி கேப்டன் பதவியில் மட்டுமல்லாமல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அணியை முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்கிறார். அவர் 2 அரை சதத்துடன் 230 ரன் எடுத்துள்ளார்.

    வாட்சன், கேதர் யாதவ் ஆகியோர் தங்களது பங்களிப்பை அதிகமாக வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் பலம் வாய்ந்தவராக திகழ்கிறார். அவர் 15 விக்கெட் சாய்த்துள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு பலன் அளித்து வருகிறார்.

    இதேபோல வேகப்பந்து வீரரான தீபக் சாஹரும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 11 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஜடேஜா, ‌ஷர்துல் தாகூர் ஆகியோரும் அணிக்கு மேலும் பலன் சேர்க்கக்கூடிய பவுலர்கள்.

    ஆல்ரவுண்டரான பிராவோ காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை. இன்றைய போட்டிக்கு அவர் உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகை அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும்.

    பெங்களூரு அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ‘பிளே ஆப்ஸ்’ சுற்று வாய்ப்பில் இருக்க அந்த அணிக்கு வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸிடம் ஏற்கனவே தோற்றதற்கு பதிலடி கொடுத்து 3-வது வெற்றியை பெங்களூர் அணி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் விராட் கோலி அந்த அணிக்கு பலமாக திகழ்கிறார். அவர் 1 சதம், 2 அரை சதத்துடன் 378 ரன் குவித்து உள்ளார். பார்தீவ் பட்டேல் (230 ரன்), மொயீன் அலி (190 ரன்) ஆகியோரும் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.

    பந்து வீச்சில் சாஹல் 13 விக்கெட் கைப்பற்றி உள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவரது பந்தை ரஸல் விளாசி தள்ளினார். உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள அவர் இன்று நேர்த்தியுடன் வீசுவார். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையான போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×