search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியை வீழ்த்தி மும்பை பதிலடி ராகுல் சாஹருக்கு ரோகித் பாராட்டு
    X

    டெல்லியை வீழ்த்தி மும்பை பதிலடி ராகுல் சாஹருக்கு ரோகித் பாராட்டு

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். #IPL2019 #DCvMI
    டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

    குருணால் பாண்டியா 26 பந்தில் 37 ரன்னும் (5 பவுண்டரி), ஹர்த்திக் பாண்டியா 15 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), குயின்டான் டி காக் 27 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், அமித் மிஸ்ரா, அக்‌சார் பட்டேல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 40 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தவான் அதிகபட்சமாக 22 பந்தில் 35 ரன்னும், (5 பவுண்டரி, 1 சிக்சர்), அக்‌சார் பட்டேல் 26 ரன்னும் எடுத்தனர். ராகுல் சாஹர் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், ஹார்த்திக் பாண்டியா, குருணால் பாண்டியா தலா 1 விக்கெட் எடுத்தனர். மும்பை அணி 6-வது வெற்றியை பெற்றது.

    இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    முதல் 2 ஓவருக்கு பிறகு 140 ரன்கள் எடுத்தாலே நல்ல ஸ்கோர் என்று நாங்கள் நினைத்தோம். எங்கள் அணியில் உள்ள அதிரடி பேட்ஸ்மேன்கள் ரன்னை உயர்த்தி விட்டனர்.



    ராகுல் சாஹரின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவரது பந்து வீச்சு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. திட்டமிட்டப்படி அவர் பந்து வீசினார். அவர் கேப்டனின் நம்பிக்கையை பெற்ற பந்து வீச்சாளர் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லி அணி 4-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறும்போது, “டாஸ் தோற்றது துரதிருஷ்டமே. நாங்கள் அனைத்து நிலையிலும் தோல்வி அடைந்து விட்டோம். நாங்கள் கடைசி 3 ஓவரில் 50 ரன்களை கொடுத்தோம். இதுவே ஆட்டத்தை மாற்றி விட்டது. இதுதான் தோல்விக்கு காரணம்” என்றார்.
    Next Story
    ×