search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    X

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை பந்தாடி கொல்கத்தா அணி 4-வது வெற்றியை ருசித்தது. #IPL2019 #RRvKKR

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின.

    ‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் ராஜஸ்தானை பேட் செய்ய அழைத்தார். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பயங்கரமாக காற்று வீசி புழுதி கிளம்பியது. இதனால் கொல்கத்தா விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா முககவசம் அணிந்தபடி களம் கண்டார்.

    இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவின் (5 ரன்) விக்கெட்டை சீக்கிரம் பறிகொடுத்தது. அடுத்து வந்த வீரர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு ஆடினர். ஆனால் விக்கெட் கைவசம் இருந்தும் கொல்கத்தாவின் பந்து வீச்சை அடித்து நொறுக்க முடியாமல் தவித்தனர். ஜோஸ் பட்லர் 37 ரன்களும், திரிபாதி 6 ரன்னும் எடுத்து கேட்ச் ஆனார்கள்.





    ஸ்டீவன் சுமித் 73 ரன்களுடனும் (59 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 7 ரன்னுடனும் (14 பந்து) களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவர்கள் முழுமையாக ஆடி 3 மற்றும் அதற்கு குறைவான விக்கெட்டுடன் ஒரு அணி எடுத்த குறைந்த ஸ்கோர் இது தான்.

    அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரின் (47 ரன், 25 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), கிறிஸ் லின் (50 ரன், 32 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) இருவரும் அதிரடியில் வெளுத்து வாங்கினர். இவர்களின் சரவெடி ஆட்டம் கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கியது.

    கொல்கத்தா அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராபின் உத்தப்பா 26 ரன்களுடனும், சுப்மான் கில் 6 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 5-வது ஆட்டத்தில் ஆடி 4-வது வெற்றியை பெற்ற கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தானுக்கு இது 4-வது தோல்வியாகும்.


    Next Story
    ×