search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை அணி தேர்வுக்கு ஐபிஎல் கவனத்தில் கொள்ளப்படுமா? - இந்திய தேர்வு குழுவினர் குழப்பம்
    X

    உலக கோப்பை அணி தேர்வுக்கு ஐபிஎல் கவனத்தில் கொள்ளப்படுமா? - இந்திய தேர்வு குழுவினர் குழப்பம்

    உலக கோப்பை அணி தேர்வுக்கு ஐ.பி.எல். செயல்பாட்டை கவனத்தில் கொள்வதா? வேண்டாமா? என்று இந்திய தேர்வு குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். #BCCI #IPL
    புதுடெல்லி:

    10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான அணிகளை ஏப்ரல் 23-ந்தேதிக்குள் அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ‘கெடு’ விதித்துள்ளது.

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் டோனி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 11 பேருக்கு அணியில் நிச்சயம் இடம் உண்டு. எஞ்சிய 4 இடத்திற்கு அம்பத்தி ராயுடு, லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், கலீல் அகமது உள்ளிட்டோர் இடையே போட்டி நிலவுகிறது. தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வீரர்களின் செயல்பாடு உலக கோப்பை அணித்தேர்வில் எடுத்துக் கொள்ளப்படாது என்று இந்திய கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஏற்கனவே கூறியிருக்கிறார்கள்.

    அப்படி பார்த்தால் முந்தைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜொலிக்கவில்லை. ஆனால் ஐ.பி.எல்.-ல் அதிரடி காட்டுகிறார். மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து பிரமிப்பூட்டினார். ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரை எடுத்துக் கொண்டால், ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் ஓரளவு நன்றாக ஆடினார். ஐ.பி.எல்.-ல் அவரது பேட்டிங் இதுவரை பெரிய அளவில் வெளிப்படவில்லை. அம்பத்தி ராயுடுவின் பேட்டிங் ஐ.பி.எல்.-ல் சொதப்புகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அவர் கடைசி 3 ஆட்டத்தில் ஒற்றை இலக்கத்தை கூட தாண்டவில்லை.

    இதனால் உலக கோப்பை அணி தேர்வுக்கு ஐ.பி.எல். செயல்பாட்டை கவனத்தில் கொள்வதா? வேண்டாமா? என்று இந்திய தேர்வு குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் ஆடுகிறார்கள். அதனால் ஐ.பி.எல். தான் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில், சில வீரர்களின் இடங்களை தீர்மானிக்கும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆருடம் கூறியுள்ளார். #BCCI #IPL
    Next Story
    ×