search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி - பஞ்சாப் அணி 3-வது வெற்றி
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி - பஞ்சாப் அணி 3-வது வெற்றி

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. #IPL2019 #KXIPvDC
    மொகாலி:

    8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 லீக் ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் மொகாலியில் நேற்று இரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் முதுகு வலியால் பாதிக்கப்பட்ட கிறிஸ் கெய்ல், ஆன்ட்ரூ டை ஆகியோருக்கு பதிலாக முஜீப் ரகுமான், சாம் குர்ரன் இடம் பெற்றனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அமித் மிஸ்ரா நீக்கப்பட்டு அவேஷ்கான் சேர்க்கப்பட்டார்.

    ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், சாம்குர்ரன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடினார்கள். முதல் ஓவரின் 3-வது பந்தில் லோகேஷ் ராகுல் முதல் பவுண்டரியை விரட்டினார். 2-வது ஓவரில் கிறிஸ் மோரிஸ் பந்து வீச்சில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய லோகேஷ் ராகுல் (15 ரன், 11 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அந்த ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆனார். இந்த அவுட்டை எதிர்த்து லோகேஷ் ராகுல் செய்த அப்பீல் தோல்வியில் முடிந்தது.



    அடுத்து மயங்க் அகர்வால் களம் இறங்கினார். 3-வது ஓவரில் அவேஷ் கான் பந்து வீச்சில் சாம்குர்ரன் 3 பவுண்டரிகள் அடித்து கலக்கினார். அடுத்த ஓவரில் சந்தீப் லாமிச்சன்னே பந்து வீச்சில் சிக்சர் தூக்கிய சாம்குர்ரன் (20 ரன், 10 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடுத்த பந்திலேயே எல்.பி.டபிள்யூ. ஆகி நடையை கட்டினார். இதைத்தொடர்ந்து சர்ப்ராஸ் கான், மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார். சர்ப்ராஸ் கான் ஆரம்பம் முதலே அடித்து ஆடினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்களில்) பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்து இருந்தது. 8-வது ஓவரில் மயங்க் அகர்வால் (6 ரன்), ஷிகர் தவானால் ரன்-அவுட் செய்யப்பட்டார். அப்போது அணியின் ஸ்கோர் 58 ரன்னாக இருந்தது.

    இதனை அடுத்து டேவிட் மில்லர், சர்ப்ராஸ் கானுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் அடித்து ஆடினார்கள். ஹர்ஷல் பட்டேல் மற்றும் சந்தீப் லாமிச்சன்னே பந்து வீச்சில் டேவிட் மில்லர் சிக்சர் தூக்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார். 12 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்னை எட்டியது. அணியின் ஸ்கோர் 13.5 ஓவர்களில் 120 ரன்னாக உயர்ந்த போது சர்ப்ராஸ் கான் (39 ரன்கள், 29 பந்துகளில் 6 பவுண்டரியுடன்) சந்தீப் லாமிச்சன்னே பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இதைத்தொடர்ந்து மன்தீப் சிங், டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்தார். 30 ரன்னில் இருக்கையில் ஹர்ஷல் பட்டேல் பந்து வீச்சில் அவரிடம் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பி பிழைத்த டேவிட் மில்லர் (43 ரன், 30 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கிறிஸ் மோரிஸ் பந்து வீச்சை அடித்து ஆடுகையில் பந்து மேல்நோக்கி எழும்பி விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் கையில் தஞ்சம் அடைந்தது.



    அடுத்து வந்த வில்ஜோன் (1 ரன்), கேப்டன் ஆர்.அஸ்வின் (3 ரன்), முருகன் அஸ்வின் (1 ரன்), முகமது ஷமி (0) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. மன்தீப் சிங் 29 ரன்னுடனும் (21 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), முஜீப் ரகுமான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டும், ரபடா, சந்தீப் லாமிச்சன்னே தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 152 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரிஷாப் பான்ட் 39 ரன்னும், காலின் இங்ராம் 38 ரன்னும், ஷிகர் தவான் 30 ரன்னும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 28 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. டெல்லி அணி தனது கடைசி 7 விக்கெட்டுகளை 8 ரன்களுக்குள் பறிகொடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் சாம்குர்ரன் ‘ஹாட்ரிக்’ உள்பட 4 விக்கெட்டும், ஆர்.அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 4-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். பஞ்சாப் அணி வீரர் சாம் குர்ரன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
    Next Story
    ×