search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவி காலம் நீட்டிக்கப்படாது
    X

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவி காலம் நீட்டிக்கப்படாது

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவி காலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி தெரிவித்தார். #RaviShastri #WorldCup
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியும், உதவி பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர் (பேட்டிங் பயிற்சியாளர்), பரத் அருண் (பந்துவீச்சு), ஸ்ரீதர் (பீல்டிங்) ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள். 2017-ம் ஆண்டு ஜூலையில் பொறுப்புக்கு வந்த இவர்களின் பதவி காலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் முடிவடைகிறது.

    முன்னாள் ஆல்-ரவுண்டரான ரவிசாஸ்திரி, இந்திய அணி வீரர்களுக்கு பிடித்தமானவராக இருக்கிறார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல்முறையாக கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்தது. உலக கோப்பை போட்டிக்கு பிறகும் கூட அவர் தான் பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று பெரும்பாலான வீரர்கள் விரும்புவார்கள். ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டதில் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பங்களிப்பு முக்கியமானது என்று இந்திய கேப்டன் விராட் கோலி அடிக்கடி சொல்வார்.

    ஆனால் பதவி காலம் முடிந்ததும் அவரை அந்த பணியில் நீட்டிக்க வைப்பதோ அல்லது ஒப்பந்தத்தை புதுப்பிப்பதோ முடியாது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. உலக கோப்பையை இந்திய அணி வென்றாலும் கூட அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாது. ஏனெனில் அந்த வகையிலான பிரிவுகள் எதுவும் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    எனவே தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும். பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் வர ரவிசாஸ்திரி விரும்பினால் அவரும் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் நேரடியாக இறுதிக்கட்ட பட்டியலில் இடம் பெற அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சச்சின் தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்துவார்கள்.

    உலக கோப்பை போட்டி ஜூலை 14-ந்தேதி நிறைவடைகிறது. அந்த மாதத்தின் இறுதியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதாவது 14 நாட்களில் அந்த தொடர் தொடங்குகிறது. எனவே பயிற்சியாளரை தேர்வு செய்யும் நடைமுறை அதற்குள் முடிவடையாவிட்டால் இடைக்கால பயிற்சியாளர் இந்திய அணியுடன் அனுப்பி வைக்கப்படுவார். #RaviShastri #WorldCup
    Next Story
    ×