search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியின் 4-வது வரிசை வீரரை ஐ.பி.எல். போட்டி முடிவு செய்யும் - கங்குலி சொல்கிறார்
    X

    இந்திய அணியின் 4-வது வரிசை வீரரை ஐ.பி.எல். போட்டி முடிவு செய்யும் - கங்குலி சொல்கிறார்

    இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசைக்குரிய வீரரை ஐ.பி.எல். போட்டி முடிவு செய்யும் என்றும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார். #IPL #SouravGanguly #WorldCup2019
    புதுடெல்லி:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த போட்டிக்கான அணிகளின் உத்தேச பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. அதில் இருந்து 15 பேர் கொண்ட இறுதி அணியை ஏப்ரல் 23-ந்தேதிக்குள் அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘கெடு’ விதித்துள்ளது.

    இந்திய அணியை பொறுத்தவரை இன்னும் ஒரு சில இடத்திற்கு யாரை சேர்ப்பது என்பது பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக பேட்டிங்கில் 4-வது வரிசையில் யாரை ஆட வைப்பது என்ற குழப்பம் நிலவுகிறது. அம்பத்தி ராயுடு இந்த வரிசைக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் அவரது பேட்டிங் மெச்சும்படி இல்லை. இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அந்த இடத்தை பிடிப்பாரா? என்பதிலும் உறுதி இல்லை. இதனால் இந்திய அணியின் 4-வது வரிசையில் ஆடப்போவது யார்? என்பது மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகரும், இந்திய முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து கங்குலி கூறியதாவது:-



    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த சீசனை எடுத்துக் கொண்டால் ரிஷப் பந்த் (டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்) சிறப்பாக ஆடினார். அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் அவர் 2-வது இடத்தை பிடித்தார். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. மூத்த விக்கெட் கீப்பர் டோனி இருப்பதால் ரிஷப் பந்த் சேர்க்கப்படுவதும், நீக்கப்படுவதுமாக இருக்கிறார். நிலையான இடம் கிடைக்காததால் ஒரு நாள் போட்டியில் அவரால் முத்திரை பதிக்க முடியவில்லை. ஆனால் ரிஷப் பந்துக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மூன்று வடிவிலான போட்டிகளில் இருந்தும் அவரிடம் நிறைய எதிர்பார்க்கலாம். அவரிடம் அபாரமான திறமை இருக்கிறது. கடின உழைப்பாளி. கடந்த 4 ஆண்டுகளாக அவரை வலை பயிற்சியில் கவனித்து வருகிறேன். பயிற்சிக்கு முதலிலேயே வந்து நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபடுவார். நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய சொத்தாக இருப்பார்.

    இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசைக்கு பலரது பெயர் பரிசீலிக்கப்படலாம். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டு தான் அந்த வரிசைக்கு சரியான வீரர் யார் என்பதை முடிவு செய்ய உதவும் என்று நினைக்கிறேன். புஜாராவை கூட அந்த வரிசையில் இறக்கலாம் என்று ஏற்கனவே யோசனை சொன்னேன். ஏனெனில் அவர் நல்ல பார்மில் இருக்கிறார். நான் கேப்டனாக இருந்தபோது, ராகுல் டிராவிட் இந்த பணியை செய்தார். வேறு எந்த வழியும் இல்லை என்றால் புஜாராவை வைத்து பரிசோதித்து பார்க்கலாம். ரிஷப் பந்த் அல்லது அம்பத்தி ராயுடு இதற்கான வாய்ப்பில் இருக்கலாம். நாங்கள் கருத்து தான் சொல்ல முடியும். ஆனால் அந்த வரிசைக்கு யார் இறக்கப்பட வேண்டும் என்பது கேப்டன் கோலிக்கு தான் தெரியும்.

    விராட் கோலி எந்த வரிசையில் விளையாடினாலும் ரன்கள் குவிப்பார். என்னை பொறுத்தவரை அவர் 2-வது விக்கெட்டுக்கு இறங்க வேண்டும்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    பேட்டியின் போது உடன் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனுமான ரிக்கிபாண்டிங் கூறுகையில், ‘நானாக இருந்தால் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் ரிஷப் பந்தை தேர்வு செய்வேன். அவரை 4-வது வரிசைக்கு பயன்படுத்துவேன். அவரிடம் இருக்கும் திறமைக்கு அவரால் உலக கோப்பையை வென்று தர முடியும். அவர் துருப்பு சீட்டாக இருப்பார்’ என்றார். #IPL #SouravGanguly #WorldCup2019


    Next Story
    ×