search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒப்பந்தப்படி உலககோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் மோத வேண்டும் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
    X

    ஒப்பந்தப்படி உலககோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் மோத வேண்டும் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

    ஒப்பந்தத்தின்படி உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது. #ICC

    துபாய்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 40 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உள்பட அனைத்து வகையான விளையாட்டுகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோ‌ஷம் எழுந்தது. இதன் காரணமாக ஒரு சில சர்வதேச விளையாட்டுகளை இந்தியா நடத்த முடியாமல் போனது.

    உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட கூடாது என்று முன்னாள் வீரர்கள் கங்குலி, காம்பீர், ஹர்பஜன்சிங் உள்ளிட்ட வீரர்கள் போர்க்கொடி தூக்கினர்.

    அதே நேரத்தில் தெண்டுல்கர், கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோர் உலக கோப்பையில் ஆட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆடாமல் 2 புள்ளிகளை இழப்பதைவிட விளையாடி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்று தெண்டுல்கர் தெரிவித்தார்.

    பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசின் முடிவின்படி செயல்படுவோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) கூறி இருந்தது.

    உலககோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கிறது.

     


    இந்த நிலையில் ஒப்பந்தத்தின்படி உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட்சன் கூறியதாவது:-

    ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து நாட்டு உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்தியிட்டு உள்ளனர்.

    2019 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படி விளையாடாமல் போவது விதிமுறைக்கு மாறானது. ஒரு அணி மற்ற அணிகளுடன் விளையாடாமல் போனால் அதற்கான புள்ளிகள் எதிர் அணிக்கு வழங்கப்படும்.

    இந்திய வீரர்கள் சமீபத்தில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடியது பலியான வீரர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதாகும். புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு உதவுவது அவசியமானது.

    நாங்கள் விளையாட்டுடன் அரசியலை கலக்க விரும்பவில்லை. இது ஐ.சி.சி.யின் தெளிவான குறிக்கோள் ஆகும். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நேரடி போட்டித் தொடர் இருநாட்டு அரசுகள் மற்றும் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சம்மந்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ICC

    Next Story
    ×