search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்திற்கு எதிராக நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி
    X

    வங்காளதேசத்திற்கு எதிராக நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

    வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZvsBAN
    வெலிங்டன்:

    நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்தது.

    வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 211 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. டெய்லர் இரட்டை சதமும், நிக்கோலஸ் செஞ்சுரியும் (107 ரன்) அடித்தனர்.

    221 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 61 ஓவர்களில் 211 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் மகமதுல்லா அதிகபட்சமாக 67 ரன் எடுத்தார். வாக்னர் 5 விக்கெட்டும், பவுல்ட் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றது. அந்த அணி முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்னில் வென்று இருந்தது. ஏற்கனவே ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 16-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. #NZvsBAN
    Next Story
    ×