search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் - காலிறுதியில் சாய்னா, ஸ்ரீகாந்த்
    X

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் - காலிறுதியில் சாய்னா, ஸ்ரீகாந்த்

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறினர். #AllEnglandbadminton #SainaNehwal
    பர்மிங்காம்:

    மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. கவுரவமிக்க பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான இதில் முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோரை நேர் செட்டில் விரட்டியடித்த இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் நேற்று 2-வது சுற்றில் லின் ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்ட்டை (டென்மார்க்) எதிர்கொண்டார். முதல் செட்டை அதிர்ச்சிகரமாக இழந்த சாய்னா அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு சரிவில் இருந்து எழுச்சி பெற்றார்.

    51 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் சாய்னா 8-21, 21-16, 21-13 என்ற செட் கணக்கில் ஹோஜ்மார்க்கை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். சாய்னா காலிறுதியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான தாய் ஜூ யிங்குடன் (சீன தைபே) மோத வேண்டி வரலாம்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-17, 11-21, 21-12 என்ற செட் கணக்கில் ஜோனதன் கிறிஸ்டியை (டென்மார்க்) வெளியேற்றி காலிறுதியை எட்டினார். இந்த வெற்றியை பெற ஸ்ரீகாந்த் 55 நிமிடங்கள் போராடினார். ஸ்ரீகாந்த் அடுத்து ‘நம்பர் ஒன்’ வீரர் கென்டோ மோமோட்டாவுடன் (ஜப்பான்) இன்று பலப்பரீட்சை நடத்துகிறார். கென்டோவுடன் கடைசியாக மோதிய 7 ஆட்டங்களிலும் ஸ்ரீகாந்த் தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 12-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் கா லாங் அங்குசிடம் (ஹாங்காங்) வீழ்ந்தார். இந்த ஆட்டம் 35 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

    இந்த போட்டியில் பங்கேற்ற 13 இந்தியர்களில் தற்போது சாய்னா, ஸ்ரீகாந்த் ஆகியோர் மட்டுமே களத்தில் நீடிக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. #AllEnglandbadminton #SainaNehwal
    Next Story
    ×