search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2வது 20 ஓவர் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்
    X

    2வது 20 ஓவர் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்

    ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி இன்றிரவு 2-வது 20 ஓவர் போட்டியில் களம் இறங்குகிறது. #AUSvIND
    பெங்களூரு:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    தொடக்க ஆட்டத்தில் மெதுவான தன்மை கொண்ட ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முடியாமல் திணறினர். லோகேஷ் ராகுல் (50 ரன்) தவிர வேறு யாரும் மெச்சும்படி ஆடவில்லை. மூத்த வீரர் டோனி கடைசி கட்டத்தில் (29 ரன், 37 பந்து) நிறைய பந்துகளை விரயம் செய்து விட்டார். அணி வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும் இந்திய வீரர்கள் போராட தவறவில்லை. ஒரு கட்டத்தில் வெற்றிக்கனி கனியும் சூழல் கூட வந்தது. கடைசி ஓவரில் எதிரணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலையில், உமேஷ் யாதவ் 2 பவுண்டரி உள்பட 14 ரன்கள் விட்டுக்கொடுத்து சொதப்பி விட்டார். ஜஸ்பிரித் பும்ரா அளவுக்கு துல்லியமாக பந்து வீசக்கூடிய பவுலர் இருந்திருந்தால் முடிவு நிச்சயம் நமக்கு சாதகமாக அமைந்திருக்கும்.

    எது எப்படியோ இப்போது முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இந்திய வீரர்கள் உள்ளனர். இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை இழக்காமல் தப்பிக்க முடியும். முதல் ஆட்டத்தில் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்புள்ளது.

    இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தொடக்க ஆட்டத்தில் குறைந்த ரன்களே எடுத்த போதிலும் நாங்கள் முழுமூச்சுடன் போராடினோம். நமது பந்து வீச்சு மிக அபாரமாக இருந்தது. ஒவ்வொருவரும் அளித்த பங்களிப்பு காரணமாக கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்புக்கு வந்து தான் தோல்வியை தழுவினோம். பேட்டிங்கை பொறுத்தவரை நாங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும் நிலையில் இன்றைய ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்வியால் எங்களது உத்வேகம் தளர்ந்து விடவில்லை. நிச்சயம் சிறப்பாக ஆடுவோம்.

    என்னை பொறுத்தவரை பேட்டிங்கில் முன்வரிசையில் ஆட வேண்டும் என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. சூழ்நிலைக்கு தக்கபடி விளையாடுவதில் கவனம் செலுத்துகிறேன். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். விசாகப்பட்டினத்தை விட பெங்களூரு ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாகவே தெரிகிறது. அதனால் இங்கு நிறைய ரன்கள் எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் பந்து வீச்சில் அமர்க்களப்படுத்தியது. ஆனால் பேட்டிங்கில் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்து வெளியேறியதும் தடுமாற்றத்திற்குள்ளானது. பிறகு ஒரு வழியாக தட்டுத்தடுமாறி கடைசி பந்தில் வெற்றி கண்டது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை அதிகமாகியுள்ளது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணியினர், அதற்கு பழிதீர்க்கும் ஆர்வமுடன் இருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று நம்பலாம்.

    பெங்களூரு மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும். சுழற்பந்து வீச்சும் எடுபடும். இங்கு இதுவரை ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும் (இங்கிலாந்து, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (பாகிஸ்தானுக்கு எதிராக) கண்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணி இந்த மைதானத்தில் 2016-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில், ஒரே ஒரு ஆட்டத்தில் ஆடி வங்காளதேசத்தை தோற்கடித்து இருந்தது. 2017-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா குவித்த 202 ரன்களே, இந்த ஸ்டேடியத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். இங்கு இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் 20 ஓவர் போட்டியில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

    கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாரிகள் கூறுகையில், ‘ஐ.பி.எல். போன்று பெரிய அளவில் ரன் மழை பொழியும் ஆடுகளமாக இது இருக்காது. ஆனாலும் கணிசமான ரன்கள் குவிக்க முடியும். விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு கடந்த 2 மாதங்களாக இந்த ஆடுகளம் எந்த போட்டிக்கும் பயன்படுத்தப்படவில்லை. 180 ரன்கள் வரையிலான இலக்கு இங்கு சவாலான ஸ்கோராக இருக்கும்’ என்றனர்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா அல்லது ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பான்ட், விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக், டோனி, குருணல் பாண்ட்யா, உமேஷ் யாதவ் அல்லது சித்தார்த் கவுல், யுஸ்வேந்திர சாஹல், மயங்க் மார்கண்டே, ஜஸ்பிரித் பும்ரா.

    ஆஸ்திரேலியா: மார்கஸ் ஸ்டோனிஸ், டார்சி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மேக்ஸ்வெல், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், ஆஷ்டன் டர்னர், நாதன் கவுல்டர்-நிலே, கம்மின்ஸ், ஜெயே ரிச்சர்ட்சன், ஜாசன் பெரேன்டோர்ப், ஆடம் ஜம்பா.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #AUSvIND
    Next Story
    ×