search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல்: வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது குறித்து மிகப்பெரிய முடிவை எடுக்க இருந்த பிசிசிஐ
    X

    ஐபிஎல்: வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது குறித்து மிகப்பெரிய முடிவை எடுக்க இருந்த பிசிசிஐ

    ஐபிஎல் கிரிக்கெட்டா? அல்லது பாகிஸ்தான் சூப்பர் லீக்கா? என்று வெளிநாட்டு வீரர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும் என பிசிசிஐ ஆலோசனை செய்துள்ளது. #IPL2019
    புல்வாமா பயங்கரவாதி தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது. இதனால் அனைத்து வகை விளையாட்டிலும் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடக்கூடாது என்ற கருத்து வலுத்து வருகிறது.

    குறிப்பாக பிசிசிஐ பாகிஸ்தானுக்கு எதிராக இருநாடுகளுக்கு இடையிலான தொடர் கிடையவே கிடையாது என்பதில் உறுதியாக உள்ளது. மேலும், உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டுமா? என்று ஆலோசித்து வருகிறது.

    பிசிசிஐ சார்பில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கப்பட்டது. இந்திய வீரர்களுக்கான பாதுகாப்பு குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளது.

    வெளிநாட்டைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரிலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் விளையாடுகிறார்கள். ஏபி டி வில்லியர்ஸ் முதன்முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகிறார்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கைவிட ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடக்கூடாது என்று வலியுறுத்த பிசிசிஐ கருதியது.

    இதுகுறித்து பிசிசிஐ-யின் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய், டயானா எடுல்ஜி, குறைதீர்க்கும் அதிகாரி, பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தினார்கள்.

    நீண்ட விவாதத்திற்குப் பிறகு இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பிசிசிஐ இதில் உறுதியாக இருந்திருந்தால் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்திருக்கும்.
    Next Story
    ×