search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் டி20 லீக்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி மெல்போர்ன் ரெனேகட்ஸ் சாம்பியன்
    X

    பிக் பாஷ் டி20 லீக்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி மெல்போர்ன் ரெனேகட்ஸ் சாம்பியன்

    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி மெல்போர்ன் ரெனேகட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. #BigBashLeague
    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி மெல்போர்ன் ரெனேகட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஹாரிஸ், பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிஞ்ச் 13 ரன்னிலும், ஹாரிஸ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹார்பர் 6 ரன்னிலும், ஒயிட் 12 ரன்னிலும், ஹார்வி 14 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் மெல்போர்ன் ரெனேகட்ஸ் 10.2 ஓவரில் 65 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.

    6-வது விக்கெட்டுக்கு கூப்பர் உடன் கிறிஸ்டியன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். கூப்பர் 43 ரன்களும், கிறிஸ்டியன் 38 ரன்கள் அடிக்க அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் பேட்டிங் செய்தது. டங்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடி 13 ஓவரில் 93 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. ஸ்டாய்னிஸ் 38 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த ஹேண்ட்ஸ்காம்ப் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டங்க் 45 பந்தில் 57 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் மேக்ஸ்வெல் 1 ரன்னிலும், மேடின்சன் 6 ரன்னிலும், கோட்ச் 2 ரன்னிலும், பிராவோ 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    93 ரன்னில் ஒரு விக்கெட்டை இழந்த ஸ்டார்ஸ் அணி 112 ரன்னுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் அந்த அணியால் சேஸிங் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. இதனால் மெல்போர்ன் ரெனேகட்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. 
    Next Story
    ×