search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரானி கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் விளாசி விஹாரி சாதனை
    X

    இரானி கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் விளாசி விஹாரி சாதனை

    இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி இரானி கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார். #IraniCup
    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது ஹனுமா விஹாரி தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். கடந்த வருடம் நடைபெற்ற இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக விளையாடிய இவர் 183 ரன்கள் விளாசியிருந்தார்.

    தற்போது இந்த வருடத்திற்கான இரானி கோப்பை கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இதில் ரஞ்சி கோப்பை சாம்பியன் விதர்பா - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    முதலில் விளையாடிய ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்கள் சேர்த்தது. தொடக்க பேட்ஸ்மேன் மயாங்க் அகர்வால் 95 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

    3-வது வீரராக களம் இறங்கிய ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி சதம் (114) விளாசினார். பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய விதர்பா கார்னிவர் சதத்தால் (102) 425 ரன்கள் குவித்தது.

    பின்னர் ரெஸ்ட் ஆப் இந்தியா 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் விளையாடியது. மயாங்க் அகர்வால் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி - ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ரகானே 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரி 180 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 52 பந்தில் 61 ரன்கள் அடிக்க ரெஸ்ட் ஆப் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் விதர்பா அணிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ரெஸ்ட் ஆப் இந்தியா.

    கடந்த வருடம் சதம் விளாசியிருந்த ஹனுமா விஹாரி, இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
    Next Story
    ×