search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிட்செலுக்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய எல்.பி.டபிள்யூ.
    X

    மிட்செலுக்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய எல்.பி.டபிள்யூ.

    ஆக்லாந்தில் நேற்று நடந்த 2-வது 20-வது ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலுக்கு வழங்கப்பட்ட எல்.பி.டபிள்யூ. அவுட் சர்ச்சையை கிளப்பியுள்ளது. #Mitchell #NZvIND
    ஆட்டத்தின் 6-வது ஓவரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்டயாவின் பந்து வீச்சை, டேரில் மிட்செல் (1 ரன்) எதிர்கொண்ட போது பந்து அவரது காலுறையில் பட்டது. இந்திய வீரர்கள் அவுட் கேட்டு குரல் எழுப்பியதும், நடுவர் கிறிஸ் பிரவுன் (நியூசிலாந்து நாட்டவர்) விரலை உயர்த்தினார். ஆனால் பந்து பேட்டில் பட்டது என்று உறுதியாக நம்பிய டேரில் மிட்செல், டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தார். இதையடுத்து ரீப்ளேயில், ‘ஹாட் ஸ்பாட்’ தொழில்நுட்பத்தில் பந்து பேட்டின் விளிம்பில் உரசியதற்கான அடையாளம் தெரிந்தது. ஆனால் ‘ஸ்னிக்கோ’ மீட்டரில் பந்து பேட்டில் பட்டதற்கான அதிர்வு தென்படவில்லை. அதே சமயம் இந்த பந்து அவரது காலுறையில் படாமல் இருந்திருந்தால் ஸ்டம்பை தாக்கியிருக்கும் என்பதும் காட்டப்பட்டது.

    இதனால் குழம்பி போன 3-வது நடுவர் ஷான் ஹாக் (நியூசிலாந்து), டேரில் மிட்செல் அவுட் என்று தீர்ப்பு அளித்தார். தனக்கு எதிராக தீர்ப்பு வந்ததும் டேரில் மிட்செலும், எதிர்முனையில் நின்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அவர்கள் கள நடுவர்களிடம் முறையிட்டும் பலன் இல்லை. இந்த மாதிரியான சூழலில் அடுத்த பந்து வீசப்படாத நிலையில் எதிரணி கேப்டன் அப்பீலை வாபஸ் பெற்றால் சம்பந்தப்பட்ட பேட்ஸ்மேனை தொடர்ந்து விளையாட வைக்கலாம்.

    இதையடுத்து வில்லியம்சனும், டேரில் மிட்செலும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் பேசி பார்த்தனர். நடுவர்களும் ரோகித் சர்மாவிடம் விவாதித்தனர். இதனால் களத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதன் பின்னர் டோனி குறுக்கிட்டு ரோகித் சர்மாவிடம் ஏதோ சொல்லி அந்த இடத்தை விட்டு நகர வைத்தார். நடுவர்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியாது என்பது போல் ரோகித் சர்மா கூறியதால், சில நிமிடங்களுக்கு பிறகு டேரில் மிட்செல் அதிருப்தியுடன் வெளியேறினார்.

    இந்த சம்பவத்தால் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் கேள்விக்குறியாகி உள்ளது. இது நடுவரின் மோசமான தீர்ப்பு என்று வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.

    சர்ச்சை குறித்து இந்திய வீரர் கலீல் அகமது பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘மிட்செல் விவகாரத்தில் 3-வது நடுவரின் முடிவுக்காக காத்திருந்தோம். ஏனெனில் எங்களால் எதுவும் செய்ய முடியாது. நடுவர் என்ன சொன்னாரே அதை நாங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டோம்’ என்றார். #Mitchell #NZvIND
    Next Story
    ×