search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றவே உலக சாம்பியன்ஷிப் தொடர்: ஐசிசி சேர்மன்
    X

    டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றவே உலக சாம்பியன்ஷிப் தொடர்: ஐசிசி சேர்மன்

    அழிந்து கொண்டிருக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காப்பாற்றவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்று ஐசிசி சேர்மன் ஷசாங்க் மனோகர் தெரிவித்துள்ளார். #ICC
    டி20 கிரிக்கெட் தொடங்கப்பட்டதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆர்வம் ரசிகர்களிடையே வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பகல்-இரவு டெஸ்ட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இது அதிக அளவில் விளையாடப்படுவதில்லை.

    தற்போது கிரிக்கெட் டெஸ்ட் இரண்டு நாடுகளுக்கு இடையில் நடத்தப்படுகிறது. ஆஷஸ் போன்ற தொடர்களுக்குத்தான் அதிக அளவு ஆதரவு இருக்கிறது. மற்ற டெஸ்ட் போட்டி தொடர்களின்போது மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற அணிகள் மற்ற அணிகளுடன் டெஸ்ட் தொடர் நடத்த ஆர்வம் காட்டுவதில்லை.

    இதனால் வீரர்களின் உண்மையான திறமையை கண்டறியும் டெஸ்ட் போட்டி அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால்தான் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்த இருக்கிறது.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றவே உலக சாம்பியன்ஷிப் தொடர் என்று வங்காளதேசம் சென்றுள்ள ஐசிசி சேர்மன் ஷசாங்க் மனோகர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷசாங்க் மனோகர் கூறுகையில் ‘‘டெஸ்ட் சாம்பியன்ஷிப்பால் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஏனென்றால், உண்மையிலேயே டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து கொண்டு வருகிறது. ஆகவே, அதை முன்னேற்றும் வகையில், நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை தொடங்கினால், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உயிர்கொடுக்க முடியும், மேலும் சுவாரஸ்யத்தை உருவாக்க முடியும் என்று முடிவிற்கு ஐசிசி இயக்குனர்கள் வந்ததால், இந்த முடிவு எடுத்துள்ளோம்.

    கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் சேனல்களின் டிஆர்பி-ஐ பார்த்தீர்கள் என்றால், டி20 போட்டிகளுக்குதான் அதிகம். டி20 கிரிக்கெட் போட்டி குறுகிய நேரத்திற்குள் முடிந்துவிடும். தற்போது ரசிகர்கள் ஐந்து நாட்கள் மைதானத்திற்கு வந்து போட்டியை பார்ப்பதில்லை.

    காலை 10 மணி முதல் 5 மணி வரை அனைவரும் வேலைக்கு செல்கிறார்கள். இதனால் போட்டியை பார்க்க வருவது கடினம். டி20 கிரிக்கெட் போட்டி மூன்றரை மணி நேரத்திற்குள் முடிந்துவிடும். அது ஒரு சினிமாவை பார்ப்பதுபோல் பார்த்துவிடுவார்கள். அதோடு போட்டி மிகவும் பரபரப்பாக வேகமாகச் செல்லும்’’ என்றார்.
    Next Story
    ×