search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட்- நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
    X

    இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட்- நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், 93 ரன்கள் என்ற எளிய இலக்கை விரைவில் எட்டிய நியூசிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZvIND #NewZealandWon
    ஹாமில்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தார்.

    இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி, டோனி இல்லாததால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லை. அதேசமயம், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம் கடும் அச்சுறுத்தல் அளித்தனர். இதனால் முன்னணி பேட்ஸ்மேன்கள் கூட ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

    துவக்க வீரர்கள் ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13), சுப்மான் கில் (9), ஜாதவ் (1), ஹர்திக் பாண்டியா (16) என முக்கிய விக்கெட்டுகளை போல்ட் கைப்பற்றினார். இதேபோல், அம்பதி ராயுடு (0), தினேஷ் கார்த்திக் (0), புவனேஸ்வர் குமார் (1) ஆகியோரை வந்த வேகத்தில் வெளியேற்றினார் கிராண்ட்ஹோம். இதனால் நிலைகுலைந்த இந்திய அணி, 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து,  92 ரன்களில் சுருண்டது.

    இதையடுத்து 93 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்  குப்தில் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார். அதன்பின்னர் கேப்டன் வில்லியம்சனையும் (11), விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார். ஆனால், 3வது விக்கெட்டுக்கு இணைந்த, நிக்கோல்ஸ்-டெய்லர் ஜோடி நிலைத்து நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.



    நிக்கோல்ஸ் 30 ரன்களும்(நாட் அவுட்), டெய்லர் 37 ரன்களும் (நாட்  அவுட்) சேர்க்க, 14.4 ஓவர்களில் இலக்கை எட்டியது நியூசிலாந்து. இதனால், 8 விக்கெட்  வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை மிரட்டிய டிரென்ட் போல்ட், ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் 1-3 என நியூசிலாந்து பின்தங்கி உள்ளது. கடைசி போட்டி வெலிங்டனில் 3-ம் தேதி நடக்கிறது.  #NZvIND #NewZealandWon
    Next Story
    ×