search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் அணி மிகவும் வலுவாக உள்ளது - டீன் ஜோன்ஸ் பாராட்டு
    X

    இந்திய கிரிக்கெட் அணி மிகவும் வலுவாக உள்ளது - டீன் ஜோன்ஸ் பாராட்டு

    ‘1980-ம் ஆண்டுகளில் இருந்த வெஸ்ட்இண்டீஸ் அணியை போன்று தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி மிகவும் வலுவாக உள்ளது’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் பாராட்டினார். #AUSvIND #DeanJones
    சிட்னி:

    ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை முதல்முறையாக வென்று சாதனை படைத்த விராட்கோலி தலைமையிலான இந்திய அணியை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் வெகுவாக பாராட்டி இருக்கிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    1980-ம் ஆண்டுகளில் வெஸ்ட்இண்டீஸ் அணி எந்த மாதிரி ஆக்ரோஷமாக விளையாடி ஆதிக்கம் செலுத்தியதோ? அதேபோல் தற்போதையை இந்திய கிரிக்கெட் அணி காட்சி அளிக்கிறது. அந்த கால கட்டத்தில் எந்த அணியையும், எந்த இடத்திலும் வீழ்த்தும் சக்தியுடன் வெஸ்ட்இண்டீஸ் அணி விளங்கியது. அது மாதிரி விராட்கோலி தலைமையிலான இந்திய அணி எல்லா அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்துகிறது. மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

    இந்திய அணிக்கு இந்த ஆஸ்திரேலிய பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது எனலாம். பெர்த் டெஸ்ட் போட்டியை தவிர அனைத்து ஆட்டங்களில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டது. இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் அணிக்கு தங்களது பங்களிப்பை அளித்தனர். இந்திய அணிக்கு முக்கிய பிரச்சினை டோனி தான். அவர் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பதால் ரிஷப் பந்த் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடும் நிலைக்கு தள்ளப்படுவார். தற்போதைய நிலையை பார்க்கையில் இந்திய அணியின் உலக கோப்பை பயணம் சிறப்பானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நியூசிலாந்து தொடரில் இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்தே அந்த அணியின் உலக கோப்பை பயணம் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு நாள் போட்டி தொடரில் இரு அணிகள் இடையே சம அளவிலான போட்டி இருக்கும் என்று நான் நினைத்தேன். டோனி தலைமையில் முந்தைய போட்டி தொடரில் இந்திய அணி கண்ட தோல்விக்கு டோனி பழிதீர்த்து விட்டார். எல்லா போட்டியிலும் டோனியின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. குறிப்பாக கடைசி 2 ஒருநாள் போட்டியில் அவரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. தொடரை வெல்ல இந்திய அணி தகுதி படைத்ததாகும். கடந்த 12 மாதங்களாக எங்கள் அணியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. சில நல்ல வீரர்கள் அணியில் இடம் பெற முடியாமல் போனது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

    நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்பதை இந்தியா நிரூபித்து காட்டியது. வழக்கமாக இந்திய அணி தனது சுழற்பந்து வீச்சாளர்களை வைத்தே எதிரணியை வீழ்த்தும். ஆனால் தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள் மூலம் வெற்றியை பெற்று வருகிறார்கள். நாங்கள் எங்கள் மண்ணில் வேகப்பந்து வீச்சு மூலம் இந்திய அணியை வீழ்த்துவோம். இந்தியா சொந்த மண்ணில் சுழற்பந்து வீச்சு மூலம் எங்களை தோற்கடிப்பார்கள். ஆனால் தற்போது தலைகீழான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    விராட்கோலி தலைசிறந்த வீரர். அவர் இதே உடல் தகுதியுடன் நீடித்தால் நிச்சயம் தெண்டுகரின் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார். இந்த கோடைகாலம் ஆஸ்திரேலிய அணிக்கு கடினமானதாக அமைந்து விட்டது. உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சவாலாக விளங்க வேண்டும் என்றால் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமானதாகும். தற்போதைய நிலையில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்தார். #AUSvIND #DeanJones
    Next Story
    ×