search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    62 வருட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கேரளா அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    62 வருட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கேரளா அரையிறுதிக்கு முன்னேற்றம்

    குஜராத்தை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 62 வருட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கேரள அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 4-வது காலிறுதி ஆட்டத்தில் குஜராத் - கேரளா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கேரளா 185 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய குஜராத் கேரளாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னில் சுருண்டது.

    23 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய கேரளா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 171 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 194 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் குஜராத் அணியின் வெற்றிக்கு 195 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கேரளா.

    இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 195 ரன்கள் அடித்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் குஜராத் அணி களம் இறங்கியது. கேரள அணியின் சந்தீப் வாரியார், பாசில் தம்பி ஆகியோரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் குஜராத் விக்கெட் மளமளவென சரிந்தது. பாசில் தம்பி 12 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டும், சந்தீப் வாரியர் 13.3 ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளும் வீழ்த்த குஜராத் 81 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது.

    இதனால் கேரளா 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 62 வருட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டும் வீழ்த்திய பாசில் தம்பி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    Next Story
    ×