search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?- நாளை கடைசி போட்டி
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?- நாளை கடைசி போட்டி

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நாளை நடைபெறுகிறது. #AUSvIND #ViratKohli #MSDhoni
    மெல்போர்ன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டுவில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நாளை (18-ந்தேதி) நடக்கிறது.

    கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 299 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றதால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

    தமிழக ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆவாரா? என்ற எதிர் பார்ப்பு இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் முகமது சிராஜ் ரன்களை வாரி கொடுத்தார். இதனால் அவர் இடத்தில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கலாம்.



    பேட்டிங்கில் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, டோனி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதேபோல மிடில் ஆர்டர் வரிசையில் தினேஷ் கார்த்திக் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    பந்து வீச்சில் புவனேஷ் வர்குமார், முகமது‌ஷமி நல்ல நிலையில் உள்ளனர். குல்தீப் யாதவ் பந்து வீச்சு சுமாராக இருப்பதால் அவர் இடத்தில் யசுவேந்திர சாஹல் இடம் பெறலாம்.

    டெஸ்ட் தொடரை கைப்பற்றியது போலவே ஒரு நாள் தொடரையும் இந்திய அணி வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

    பேட்டிங், மற்றும் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் ஷான்மார்ஷ், ஹேண்ட்ஸ் கோம், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ் ஆகியோரும், பந்து வீச்சில் ரிச்சர்ட்சன், பெகரன்டார்ப் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    டெஸ்ட் தொடரை இழந்த மாதிரி ஒரு நாள் தொடரை இழந்து விடக்கூடாது என்பதற்காக அந்த அணி வெற்றிக்கு கடுமையாக போராடும்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 131-வது போட்டியாகும். இதுவரை நடந்த 130 போட்டியில் இந்தியா 46-ல், ஆஸ்திரேலியா 74-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. சோனிசிக்ஸ், சோனி டென் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.  #AUSvIND #ViratKohli #MSDhoni
    Next Story
    ×