search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாசிம் ஜாபர்
    X
    வாசிம் ஜாபர்

    ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டங்கள்: 2-வது நாள் ஆட்ட முடிவில் அணிகளின் நிலவரங்கள்...

    ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குஜராத்திற்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கேரளா. #RanjiTrophy
    ரஞ்சி டிராபி காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் விதர்பா - உத்தரகாண்ட் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய உத்தரகாண்ட் 355 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. 4-வது வீரராக களம் இறங்கிய அவ்னீஷ் சுதா 91 ரன்களும், ராவத் 108 ரன்களும் சேர்த்தனர். விதர்பா அணிக்காக விளையாடி வரும் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் விதர்பா களம் இறங்கியது. தொடக்க வீரர் பாசல் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சய் உடன் அனுபவ வீரர் வாசிம் ஜாபர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் சதம் விளாச விதர்பா 1 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்துள்ளது. சஞ்சய் 112 ரன்னுடனும், வாசிம் ஜாபர் 111 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    2-வது காலிறுதி ஆட்டத்தில் உத்தர பிரதேசம் - சவுராஷ்டிரா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற உத்தர பிரதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் தேசாய் 84 ரன்கள் சேர்த்து அடித்தளம் அமைத்தார். முதல் நான்கு வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் கார்க் 49 ரன்களும், ரித்து சிங் 150 ரன்களும், சவுரப் குமார் 55 ரன்களும் சேர்க்க உத்தர பிரதேசம் 385 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. சவுராஷ்டிரா அணியின் உனத்கட் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    சவுராஷ்டிரா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் 84 ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் சொதப்பியதால் சவுராஷ்டிரா 170 ரன்களுக்குள் 7 விக்கெட்டை இழந்ததுள்ளது. மன்கட் 42 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

    3-வது காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் - கர்நாடகா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கார்நாடகா பீல்டிங் செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் 224 ரன்கள் சேர்த்து அல்அவுட் ஆனது. லாம்ரோன் 50 ரன்களும், பிஷ்னோய் 79 ரன்களும் சேர்த்தனர். கர்நாடகா அணி சார்பில் மிதுன், கவுதம் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா ரன்கள் அடிக்க திணறியது. சித்தார்த் 52 ரன்கள் சேர்த்தார். 9-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் வினய் குமார் ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் சேர்க்க கர்நாடகா 263 ரன்கள் சேர்த்து முன்னிலைப் பெற்றது. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய ராஜஸ்தான் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் சேர்த்துள்ளது.

    4-வது காலிறுதி ஆட்டத்தில் கேரளா - குஜராத் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய கேரளா 185 ரன்னில் சுருண்டது. குஜராத் அணியைச் சேர்ந்த கஜா 4 விக்கெட்டும், நக்வாஸ்வாலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய குஜராத் கேரளாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னில் சுருண்டது. சந்தீப் வாரியர் 4 விக்கெட்டும், பாசில் தம்பி, நித்தீஷ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    23 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய கேரளா, இதிலும் திணறி 171 ரன்னில் சுருண்டது. அத்துடன் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேரளா தற்போது 194 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் நாளை 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கும்.
    Next Story
    ×