search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்ததே தோல்விக்கு முக்கிய காரணம்: விராட் கோலி
    X

    4 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்ததே தோல்விக்கு முக்கிய காரணம்: விராட் கோலி

    தொடக்கத்தில் நான்கு ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்ததே தோல்விக்குக் காரணம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்னில் தோற்றது. சிட்னியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 61 பந்தில் 73 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), உஸ்மான் கவாஜா 59 ரன்னும், ஷான் மார்ஷ் 54 ரன்னும் எடுத்தனர்.

    புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய இந்திய அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 254 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வெற்றி பெற்றது.

    ரோகித் சர்மா சதம் அடித்தும் பலன் இல்லை. அவர் 129 பந்தில் 133 ரன்னும் (10 பவுண்டரி, 6 சிக்சர்), டோனி 96 பந்தில் 51 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டும், பெரன்டார்ப், ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    எங்களது ஆட்டம் திருப்தி அளிக்கவில்லை. பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டதாக கருதுகிறோம். ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் 300 ரன்னுக்கு மேல் குவிக்கலாம். 289 ரன் இலக்கு சேஸ் செய்யக்கூடியதுதான். தொடக்கத்திலேயே 4 ரன்னில் 3 முக்கிய விக்கெட் சரிந்ததே தோல்விக்கு காரணம். இதுவே ஆட்டத்தின் திருப்புமுனை.

    ரோகித் சர்மா அபாரமாக விளையாடினார். அவருக்கு டோனி உறுதுணையாக இருந்தார். ஆனால் ஆட்டத்தின் வேகத்துக்கு தகுந்தப்படி நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். ரோகித்தும், டோனியும் நீண்ட நேரம் களத்தில் நின்று வாய்ப்பை பெற்றுக் கொடுத்தனர். டோனி தவறான நேரத்தில் ஆட்டம் இழந்தார். அவரது அவுட் ரோகித் சர்மாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

    மேலும் ஒரு ஜோடி நிலைத்து இருந்தால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து இருப்போம். எங்களை விட ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டது. ஆட்டத்தின் முடிவை பற்றி நாங்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாக மாட்டோம். அணியை எவ்வாறு மேம்படுத்துவது என்பதுதான் முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறும்போது, “இந்த வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடக்கத்தில் இந்தியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பானது. இளம் வீரர் ரிச்சர்ட்சன் அபாரமாக பந்து வீசினார்” என்றார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கெண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டுவில் நாளைமறுநாள் (15-ந்தேதி) நடக்கிறது.
    Next Story
    ×