search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெர்த் போன்ற ஆடுகளங்களில் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள விரும்பமாட்டேன்: விராட் கோலி பெருமிதம்
    X

    பெர்த் போன்ற ஆடுகளங்களில் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள விரும்பமாட்டேன்: விராட் கோலி பெருமிதம்

    தற்போது உலகின் சிறந்த பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார், அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள நானே தயங்குவேன் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #ViratKohli
    மெல்போர்ன் டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த டெஸ்டில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். அதனால்தான் கோப்பையை தக்க வைத்துள்ளோம். ‘பாலோ-ஆன்’ வழங்கப்படாதது குறித்து வெளியான கருத்துகளை படிக்காதது நல்ல விஷயமாகும். 2-வது இன்னிங்சிலும் பேட்டிங் செய்து இன்னும் கூடுதலான ரன்களை இலக்காக நிர்ணயிக்க விரும்பினோம். ஏனெனில் 4 மற்றும் 5-வது நாளில் இங்கு பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்பது தெரியும்.

    வெற்றிக்கான எல்லா பெருமையும் பந்து வீச்சாளர்களையே சாரும். ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி மூன்று பேரும் இணைந்து, ஒரு ஆண்டில் வெளிநாட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சு கூட்டணி (134 விக்கெட்) என்ற சாதனையை படைத்திருக்கிறார்கள். அவர்கள் பந்து வீசி வரும் விதம் கேப்டனாக என்னை பெருமைப்பட வைக்கிறது.

    ஜஸ்பிரித் பும்ரா, இப்போது உலகின் சிறந்த பந்து வீச்சாளராக விளங்குகிறார் என்றுதான் சொல்வேன். குறைவான டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் கூட அவர் ஒரு ‘மேட்ச் வின்னர்’ என்பதில் சந்தேகமில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பெர்த் போன்ற ஆடுகளங்களில் அவரது பந்து வீச்சை நானே சந்திக்க விரும்பமாட்டேன். ஏனெனில் அவருக்குரிய உகந்த சூழல் அமைந்தால், பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக் கூடியவராக மாறி விடுவார்.

    இந்தியாவில் ரஞ்சி போன்ற முதல்தர கிரிக்கெட் போட்டிக்கான வசதி வாய்ப்புகள் பிரமாதமாக உள்ளன. உள்ளூர் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய சவால்களை சந்திக்கிறார்கள். அது வெளிநாட்டில் சாதிப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது.



    எங்களது வெற்றிப் பயணத்தை இத்தோடு நிறுத்தி விடப்போவதில்லை. இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. சிட்னியில் நடக்கும் கடைசி டெஸ்டில் நேர்மறை எண்ணத்துடன் விளையாடுவோம். கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றியை தொடர விரும்புகிறோம்.

    ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டனாக இருப்பேனா? என்ற கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாது. ஆனால் தொடரை வெல்வதுதான் எங்களது ஒரே இலக்கு. அதற்கான முயற்சிக்கு தடை எதுவும் இல்லை. தொடரை வெல்லும் வாய்ப்பில் இதற்கு முன்பு இத்தகைய நிலைமையில் (2-1) இருந்ததில்லை.

    இவ்வாறு கோலி கூறினார்.
    Next Story
    ×