search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெல்போர்ன் டெஸ்ட்: 137 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரில் 2-1 என முன்னிலை
    X

    மெல்போர்ன் டெஸ்ட்: 137 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரில் 2-1 என முன்னிலை

    மெல்போர்ன் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்தியா 137 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. #AUSvIND
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும் 25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கவில்லை. ஒருவேளை கடைசி நாளில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டால் சேசிங் செய்வது மிகவும் கடினம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் 292 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடுவது என்று முடிவு செய்தது.

    ஆனால் 2-வது இன்னிங்ஸ் இந்தியாவுக்கு திருப்திகரமாக அமையவில்லை. இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்தபோது தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. கம்மின்ஸ் 61 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. காலையில் மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை. பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்கியது. கம்மின்ஸ் 63 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். நாதன் லயன் 7 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 261 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. #AUSvIND #TeamIndia
    Next Story
    ×