search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    346 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்தியா- 2ம் இன்னிங்சில் 54/5
    X

    346 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்தியா- 2ம் இன்னிங்சில் 54/5

    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில், இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்தபோதும், 346 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. #AUSvIND #TeamIndia
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்), ரோகித் சர்மா (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

    பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளித்தார். இந்தியாவின் வேகப்பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆஸ்திரேலியா, மூன்றாம் நாளான இன்று 151 ரன்களில் சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.


    இதையடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி, 2ம் இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் ஏற்பட்ட பின்னடைவுக்கு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். குறிப்பாக கம்மின்ஸ் வீசிய பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

    துவக்க வீரர் விகாரி 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த புஜாரா, இந்த இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்கமல் வெளியேறினார். இதேபோல் கேப்டன் விராட் கோலியும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ரகானே 1 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இந்த நான்கு விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் கைப்பற்றினார்.


    இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், மற்றொரு முன்னணி வீரர் ரோகித் சர்மாவின் விக்கெட்டை ஹேசில்வுட் கைப்பற்றினார். 44 ரன்கள் எடுப்பதற்குள் 5 முன்னணி விக்கெட்டுகளை இழந்த நிலையில், மயங்க் அகர்வால், ரிஷப் பந்த் ஜோடி நிதானமாக விளையாடியது. இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. அகர்வால் 28 ரன்களுடனும், ரிஷப் பந்த் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    நாளை 4-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில், ஆஸ்திரேலியாவைவிட இந்தியா 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் மேற்கொண்டு 50 ரன்கள் சேர்த்தால்கூட ஆஸ்திரேலியாவுக்கு அது கடின இலக்காக அமையும்.  #AUSvIND #TeamIndia
    Next Story
    ×