search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயிரம் கேள்விகளை எழுப்பிய ஜடேஜாவின் காயம் விவகாரம்: உடற்தகுதி என பிசிசிஐ முற்றுப்புள்ளி
    X

    ஆயிரம் கேள்விகளை எழுப்பிய ஜடேஜாவின் காயம் விவகாரம்: உடற்தகுதி என பிசிசிஐ முற்றுப்புள்ளி

    சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா காயத்தால் அவதிப்பட்டார் என்ற ரவி சாஸ்திரியின் பேச்சு, பெரும் புயலை கிளப்பியது. அதற்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்தது. #AUSvIND #BCCI
    ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்றது. உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    பெர்த் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் தேர்வு முறைகளை முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர். இந்திய அணி பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறங்கியது தவறு என்று கூறிய அவர்கள், அஸ்வின் காயம் அடைந்த நிலையில் ஜடேஜாவை அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டினர். இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றதையும் சுட்டிக்காட்டினர்.

    இந்நிலையில் அணித்தேர்வு தொடர்பான சலசலப்புகளுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு குறை சொல்வதும், விமர்சிப்பதும் எளிது. அவர்களின் கருத்துகள் மிக தொலைவில் இருக்கிறது. ஏனெனில் நாங்கள் இப்போது புவியின் தென்துருவத்தில் இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை, அணியின் நலனுக்கு எது சிறந்ததோ அதை செய்கிறோம் அவ்வளவுதான்.

    அஸ்வின் காயத்தில் சிக்கிய நிலையில் பெர்த் டெஸ்டில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை சேர்த்து இருக்கலாம் என்று சொல்கிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அப்போது ரவீந்திர ஜடேஜா உடற்தகுதியுடன் இல்லை. தோள்பட்டை வலியால் அவதிப்பட்ட அவருக்கு ஆஸ்திரேலியா வந்து இறங்கியதும் 4 நாட்களுக்கு ஊசி போடப்பட்டது.

    இந்தியாவில் இருந்தபோதே தோள்பட்டையில் கொஞ்சம் ‘பிடிப்பு’ இருப்பதை அவர் உணர்ந்திருந்தார். மருந்தினை ஊசி மூலம் உடலில் செலுத்தினாலும், காயம் சரியாவதற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் நாட்கள் ஆகிவிட்டது.

    பெர்த் டெஸ்டின்போது அவர் 70 முதல் 80 சதவீதம் வரை உடல்தகுதியுடன் இருப்பதாக உணர்ந்தோம். அதனால் அந்த டெஸ்டில் நாங்கள் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை. ஆனால் இங்கு (மெல்போர்ன்) 80 சதவீதம் உடல்தகுதியுடன் இருந்தால் கூட அவரை களம் இறக்குவோம்’’ என்றார்.

    ரவீந்திர ஜடேஜா இந்தியாவில் இருந்து கிளம்பும் போதே காயத்தில்தான் இருந்தார் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படுத்திய தகவல் புதுவித சர்ச்சையை கிளப்பியது.

    காயமடைந்த வீரரை முக்கியமான இந்த தொடருக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழுவினர் எப்படி தேர்வு செய்தார்கள்? அதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? காயத்துடன் இருந்தால் பெர்த் டெஸ்டில் எப்படி பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டார்? விராட் கோலி, ஏன் ஜடேஜா குறித்து நாங்கள் யோசிக்கவே இல்லை, நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன்தான் களம் இறங்க முடிவு செய்தோம் என்று கூறினார்? என ரவி சாஸ்திரியின் பதில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.



    இதற்கிடையில் இந்தியாவில் இருந்து புறப்படும்போது ஜடேஜா உடற்தகுதியுடன்தான் இருந்தார் என சவுராஷ்டிரா அணியின் பயிற்சியாளர் தெரிவித்தார். இதனால் இந்த விவகாரம் பெரிய புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் பிசிசிஐ, ஜடேஜா உடற்தகுதியுடன் இந்தியாவில் இருந்து சென்றார் என்று விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

    இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘நவம்பர் 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடந்த ரஞ்சி கிரிக்கெட்டில் பங்கேற்ற ஜடேஜா எந்தவித காயப் பிரச்சினையும் இன்றி 64 ஓவர்கள் பந்து வீசினார். அதைத் தொடர்ந்தே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணிக்கு தேர்வானார்.

    சிட்னியில் நடந்த பயிற்சி கிரிக்கெட்டின்போது அவருக்கு இடது தோள்பட்டையில் பிரச்சனை ஏற்பட்டது. ஊசி போட்டு ஓய்வு கொடுத்த நிலையில் அவரது தோள்பட்டையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இப்போது 3-வது டெஸ்டில் விளையாட தயார் நிலையில் இருக்கிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×