search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாடும்: பிசிபி அதிகாரி நம்பிக்கை
    X

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாடும்: பிசிபி அதிகாரி நம்பிக்கை

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் ஒருநாள் போட்டியில் விளையாடும் என பிசிபி நிர்வாக இயக்குனர் வாசிம் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #PCB
    இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். 6 வீரர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அதன்பின் எந்த அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. ஆஸ்திரேலியா 1998-ம் ஆண்டில் இருந்தே பாகிஸ்தான் சென்று  விளையாடவில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இதில் ஒரு பகுதி ஆட்டமாவது பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் வாசிம் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வாசிம் கான் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் வந்து விளையாடுவதற்கு நாங்கள் அதிக பாதுகாப்பு வழங்க உறுதி செய்வோம். அவர்களுக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பாகிஸ்தானில் தொடர்ந்து சர்வதேச போட்டிகள் நடைபெறுவதற்காக மற்ற கிரிக்கெட் போர்டுகளிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடக்க வடிவத்திலேயே இருக்கிறது.

    நான் மற்ற போர்டுகளின் தலைவர்களிடம் உட்கார்ந்து, எங்களுடைய திட்டத்தில் எங்கே இடைவெளி உள்ளது? உங்களுக்கு தர்மசங்கடமாக உள்ள விஷயம் என்ன? நீங்கள் பாகிஸ்தான் வந்து விளையாட நாங்கள் என்ன உறுதியளிக்க வேண்டும்? போன்ற கேள்விகள் குறித்து பேச வேண்டியது அவசியமானது’’ என்றார்.

    இலங்கை அணி 2017-ல் பாகிஸ்தான் சென்று ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×