search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத்சிங்.
    X
    இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத்சிங்.

    உலக கோப்பை ஹாக்கி காலிறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்

    உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. #HockeyWorldCup2018
    புவனேஸ்வரம்:

    14-வது உலக கோப்பை  ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

    இதில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் கடைசி காலிறுதி ஆட்டத்தில் 1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, 3 முறை சாம்பியனான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. முதலில் மாலை 4.45 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் நேரடியாக காலிறுதிக்குள் நுழைந்தது. நெதர்லாந்து அணி லீக் சுற்றில் ஜெர்மனியிடம் தோல்வியை சந்தித்தது. 2-வது சுற்றில் அந்த அணி கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்குள் கால் பதித்தது. தற்போதைய உலக தரவரிசையில் இரு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. இந்திய அணியை (5-வது இடம்) விட நெதர்லாந்து அணி (4-வது இடம்) ஒரு இடம் தான் முன்னணியில் உள்ளது.

    ஒட்டுமொத்தத்தில் இரு அணிகளும் 105 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் நெதர்லாந்து அணி 48 முறையும், இந்திய அணி 33 தடவையும் வென்று இருக்கின்றன. 24 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தியது இல்லை. இந்த போட்டியில் இரு அணிகளும் 6 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் நெதர்லாந்து அணி 5 முறை வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

    நெதர்லாந்துக்கு எதிரான முந்தைய மோசமான நிலையை மாற்றி உள்ளூரில் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரு அணிகளும் தாக்குதல் பாணியை கடைப்பிடிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த காலங்களில் எங்களுக்கு எதிராக நெதர்லாந்து அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால் சமீப காலங்களில் நெதர்லாந்து அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் அவர்களை வீழ்த்தி இருக்கிறோம். கடந்த ஜூன் மாதம் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அவர்களுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தோம். இந்திய  ஹாக்கி அணி நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆட்டம் சவால் நிறைந்ததாக இருக்கும்.’ என்றார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் அளித்த பேட்டியில், ‘130 கோடி இந்திய மக்களின் விருப்பம் என்னவோ? அது தான் எங்களுடைய விருப்பமாகும். இந்த போட்டிக்கு இந்திய வீரர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருக்கிறார்கள். நெதர்லாந்து அணியின் எத்தகைய சவாலையும் சமாளிக்க ஆயத்தமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

    நெதர்லாந்து அணியின் கேப்டன் பில்லி பாக்கெர் கூறுகையில், ‘ஆட்டம் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இருந்தாலும் எப்பொழுதும் நாங்கள் எங்களுக்குரிய பாணி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். இந்திய அணிக்கு நிறைய நெருக்கடி இருக்கிறது. உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இந்திய அணிக்கு இருக்கிறது. எங்களை விட இந்திய அணிக்கு அதிக நெருக்கடி இருப்பதாக நினைக்கிறேன்’ என்றார்.

    முன்னதாக மாலை 4.45 மணிக்கு அரங்கேறும் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #HockeyWorldCup2018
    Next Story
    ×