search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவில் சாதனை வெற்றி- இந்திய அணிக்கு பாராட்டு குவிகிறது
    X

    ஆஸ்திரேலியாவில் சாதனை வெற்றி- இந்திய அணிக்கு பாராட்டு குவிகிறது

    ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை வெற்றி பெற்ற விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிகிறது. #AUSvIND #ViratKholi
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டு மைதானத்தில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்னும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 235 ரன்னும் எடுத்தன. இந்தியா 2-வது இன்னிங்சில் 307 ரன் குவித்தது. 323 ரன் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா 291 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த டெஸ்டில் புஜாரா 194 ரன்னும் (123+71), ரகானே 83 ரன்னும் (70+13) எடுத்தனர். பும்ரா 6 விக்கெட்டும் (3+3), முகமது‌ஷமி 5 விக்கெட்டும் (2+3) கைப்பற்றினார்கள்.

    ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 71 ஆண்டுகளில் (1971 முதல்) டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் வென்றது இல்லை. தற்போது முதல் டெஸ்டில் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கிடைத்தது. கடைசியாக 2008-ல் வெற்றி பெற்றது.

    ஒட்டு மொத்தமாக ஆஸ்திரேலிய மண்ணில் 6-வது வெற்றியையும், அடிலெய்டு மைதானத்தில் 2-வது வெற்றியையும் பதிவு செய்தது.

    ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை வெற்றி பெற்ற விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிகிறது. அதன் விவரம்:-



    டெண்டுல்கர்: இந்திய அணி டெஸ்ட் தொடரை மிகவும் சிறப்பாக தொடங்கி இருந்தது. ஒரு போதும் அழுத்தத்தை விட்டு விடக் கூடாது. புஜாராவின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு இன்னிங்சிலும் அற்புதமாக ஆடினார். ரகானேயும் 2-வது இன்னிங்சில் நன்றாக ‘பேட்டிங்’ செய்தார். 4 பந்து வீச்சாளர்களும் தங்களது பங்களிப்பை அர்ப்பணிப்புடன் செய்துள்ளனர். இதை பார்க்கும் போது 2003-ம் ஆண்டு நடந்த போட்டி நினைவுக்கு வந்தது.

    கங்குலி: அடிலெய்டு டெஸ்டில் பெற்ற வெற்றி மிகவும் சிறந்தது. உண்மையிலேயே நம்பத்தகுந்தது. இந்த டெஸ்ட் தொடர் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் முடிவு ஏற்படும்.

    ஷேவாக்: டெஸ்ட் கிரிக்கெட் தான் சிறந்த (பெஸ்ட்) கிரிக்கெட். ஆஸ்திரேலிய அணி கடைசி கட்டத்தில் கடுமையாக போராடியது. ஆனால் இந்திய அணி அதை விட சிறப்பாக செயல்பட்டது. முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 41 ரன் என்ற நிலையில் இருந்து இந்தியா பெற்ற வெற்றி இந்த சிறப்பானது. புஜாராவும், பந்து வீச்சாளர்களும் மிகவும் அபாரமாக செயல்பட்டனர்.

    இது சிறப்பு டெஸ்ட் தொடராக இருக்கும் என்பது உறுதி.

    வி.வி.எஸ். லட்சுமண்: ஆஸ்திரேலிய பின்கள வீரர்கள் இந்த டெஸ்டில் மிகவும் கடுமையாக போராடினார்கள். இந்திய பவுலர்களின் செயல்பாடு அற்புதமாக இருந்தது. இதே திறமையுடன் 2-வது டெஸ்டில் விளையாட வேண்டும்.

    ஹர்ஷா போக்ளே (டெலிவிசன் வர்ணனையாளர், விமர்சகர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டில் வெற்றி பெறுவது அரிதானது. இந்த போட்டி கிரிக்கெட்டில் அற்புதமானவை. நீண்ட நாள் நினைவில் இருக்கும். கடினமான போட்டிகள் எப்போதுமே மறக்க முடியாததாக இருக்கும்.

    இதேபோல் ஹர்பஜன்சிங், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மைக்கேல் கிளார்க், வார்னே, மிச்சேல் ஜான்சன் ஆகியோரும் இந்திய அணியை பாராட்டி உள்ளனர். #AUSvIND #ViratKholi
    Next Story
    ×