search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிர்ஷ்டம், அதிரடி சதம்: அடிலெய்டு டெஸ்டில் முரளி விஜய் விளையாட வாய்ப்பு
    X

    அதிர்ஷ்டம், அதிரடி சதம்: அடிலெய்டு டெஸ்டில் முரளி விஜய் விளையாட வாய்ப்பு

    கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிராக சதம் விளாசியதால் முரளி விஜய் அடிலெய்டு டெஸ்டில் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. #AUSvIND
    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தவர் முரளி விஜய். தென்ஆப்பிரிக்கா தொடரிலும், இங்கிலாந்து தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை.

    அதேவேளையில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடினார். கவுன்ட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிவில் விளையாடும் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

    அடிலெய்டில் முதல் டெஸ்ட் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மோதிய, இந்த ஆட்டம் நவம்பர் 28-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி (நேற்று) வரை நடைபெற்றது.

    ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறங்கிய பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல் ஆகியோரைத்தான் இந்திய அணி நிர்வாகம் தொடக்க வீரர்களாக களம் இறக்க முடிவு செய்தது. இதனால் முதல் இன்னிங்சில் முரளி விஜய்க்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரித்வி ஷா 69 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். லோகேஷ் ராகுல் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    இந்தியா பீல்டிங் செய்யும்போது பிரித்வி ஷாவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் லோகேஷ் ராகுல் உடன் முரளி விஜய் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். லோகேஷ் ராகுல் 62 ரன்கள் சேர்த்தார். முரளி விஜய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 132 பந்தில் 129 ரன்கள் குவித்தார்.

    காயம் அடைந்த பிரித்வி ஷா முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முரளி விஜயா? அல்லது ரோகித் சர்மாவா? என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில் 2-வது இன்னிங்ஸ் சதத்தால் முரளி விஜய்  தொடக்க பேட்ஸ்மேனாக விளையாட அதிக வாய்ப்புள்ளது.
    Next Story
    ×