search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் உயிரோடுதான் இருக்கிறேன்: இறந்துவிட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரிக்கெட் வீரர்
    X

    நான் உயிரோடுதான் இருக்கிறேன்: இறந்துவிட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரிக்கெட் வீரர்

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் நாதன் இறந்துவிட்டதாக வதந்தி பரவி வந்தது. இந்நிலையில் உயிரோடு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NZ #NathanMcCullum
    நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடிய சகோதரர்கள் பிராண்டன் மெக்கல்லம், நாதன் மெக்கல்லம். இதில் பிராண்டன் மெக்கல்லம் அதிரடி பேட்ஸ்மேன். நாதன் மெக்கல்லம் சுழற்பந்து வீச்சாளர். இருவருமே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.

    பல்வேறு நாடுகளில் நடைபெறும் ‘லீக்’ போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் நாதன் மெக்கல்லம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்றும் அவரின் மனைவி வனேசா இதை அறிவித்தார் என்றும் டுவிட்டர், பேஸ்புக்கில் வதந்திகள் பரவின.

    அந்த செய்தியில், “நியூசிலாந்து அணிக்காக ஒருநாள், 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் நாதன் மெக்கல்லம் (1980, செப்டம்பர் 1-ல் பிறந்தார்) உயிர் இழந்தார். இந்த தகவலை அவரின் மனைவி வனேகா அறிவித்துள்ளார் என்று நியூசிலாந்து பேஸ்ஹப் என்ற பேஸ்புக் முகவரியில் இருந்து வெளியானது. மேலும் டுவிட்டரில் வெளியாகி ஏராளமாக பகிரப்பட்டது.

    இந்த வதந்தியை கேட்டு நாதன் மெக்கல்லம் சிரித்தவாறு நான் உயிரோடு இருக்கிறேன். யாரும் வதந்திகளை நம்பாதீர்கள் என்று அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    நான் உயிரோடு தான் இருக்கிறேன். இதற்கு முன்பை காட்டிலும் அதிக வலிமையுடன் இருக்கிறேன். யாரும் நம்ப வேண்டாம். நான் இறந்துவிட்டேன் என்கிற செய்தி பொய்யானது. அனைவரையும் நேசிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைமை நிர்வாகி ஹீத் மில்ஸ் கூறியதாவது:-

    நாதன் மெக்கல்லம் இறந்துவிட்டார் என்கிற செய்தி எனக்கும் கிடைத்தது. இந்தியாவில் இருந்து சிலர் என்னை தொடர்பு கொண்டு கேட்டார்கள். அதன்பின்னர் நாதன் மெக்கல்லமை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று விசாரித்து உண்மையை அறிந்தேன்.

    நாதன் மெக்கல்லம் என்னுடைய தொலைபேசியை எடுத்து பேசும் வரை என் மனது துடித்துக்கொண்டே இருந்தது. அவர் என்னிடம் நலமாக இருக்கிறேன். ஆக்லாந்தில் விளையாடி வருகிறேன் என்று கூறிய பின்புதான் நிம்மதி அடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×