search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீசுடனான முதல் டெஸ்ட் - 2வது இன்னிங்சில் வங்காள தேசம் விக்கெட்டுகள் மளமளவென சரிவு
    X

    வெஸ்ட் இண்டீசுடனான முதல் டெஸ்ட் - 2வது இன்னிங்சில் வங்காள தேசம் விக்கெட்டுகள் மளமளவென சரிவு

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காள தேசம் தனது இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. #BANvWI
    சிட்டகாங்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங் நகரில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற வங்காள தேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியில் மொமினுல் ஹக் பொறுப்புடன் விளையாடி அபாரமாக சதமடித்து 120 ரன்னில் வெளியேறினார்.  தொடக்க ஆட்டக்காரரான இம்ருல் காயேஸ் 44 ரன்னில் அவுட்டானார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்காள தேசம் அணி 88 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 315 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷானோன் கேப்ரியல், ஜோமெல் வாரிகன் ஆகியோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில் வங்காள தேசம் 324 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை
    வங்காள தேச பந்து வீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 88 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

    ஹெட்மயர் மற்றும் டவ்ரிச் ஆகியோரின் அரை சதத்தால் அந்த அணி 200 ரன்களை தாண்டியது.  டவ்ரிச் 63 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வங்காள தேசம் அணி சார்பில் நயீம் ஹாசன் 5 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹாசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, வங்காள தேசம் அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் துல்லிய பந்து வீச்சால் வங்காள தேசம் அணியின் தொடக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
     
    சிட்டகாங் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காள தேசம் 17 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெஸ்ட் இண்டீசை விட 133 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #BANvWI
    Next Story
    ×