search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆடம் ஜம்பா
    X
    ஆடம் ஜம்பா

    தவான், தினேஷ் கார்த்திக் அதிரடி வீண்- 4 ரன்னில் தோல்வியைத் தழுவியது இந்தியா

    தவான், தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இக்கட்டான நிலையில் விக்கெட் இழந்ததால் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைப்பட்டது. பின்னர் மழை விட்டதும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 24 பந்தில் 4 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.

    ஆஸ்திரேலியா 158 ரன்கள் எடுத்தாலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    102 பந்தில் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்கினார்கள். தவான் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ரோகித் சர்மா சற்று தடுமாறினார்.

    5-வது ஓவரை பெரென்டோர்ப் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 13 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னில் அடுத்தடுத்து ஆடம் ஜம்பா சுழற்பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    மறுமுனையில் தவான் 28 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 32 பந்தில் 69 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.

    கடைசி இரண்டு ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. அண்ட்ரிவ் டை 16-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை தினேஷ் கார்த்திக் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 3-வது பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார்.



    ரிஷப் பந்த் ஆட்டமிழ்ந்ததும் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. இருந்தாலும் கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் அபாரமான வகையில் பவுண்டரிக்கு விரட்டினார்.

    இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். குருணால் பாண்டியா எதிர்கொண்டார். முதல் பந்தில் குருணால் பாண்டியா இரண்டு ரன்கள் அடித்தார். 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 3-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

    இதனால் கடைசி மூன்று பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் தினேஷ் கார்த்திக் 13 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. கடைசி பந்தில் குல்தீப் யாதவ் பவுண்டரி அடிக்க இந்தியா 17 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

    இதனால் ஆஸ்திரேலியா நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் மெல்போர்னில் 23-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 25-ந்தேதி சிட்னியிலும் நடக்கிறது. ஆடம் ஜம்பா, ஸ்டாய்னிஸ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.
    Next Story
    ×