search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் போட்டி போல பரபரப்பாக இருந்தது- ரோகித்சர்மா கருத்து
    X

    ஐபிஎல் போட்டி போல பரபரப்பாக இருந்தது- ரோகித்சர்மா கருத்து

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டி ஐபிஎல் போல பரபரப்பாக இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். #INDvWI #WIvIND #RohitSharma
    சென்னை:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது.

    நிக்கோலஸ்பூரன் 25 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), டாரன் பிராவோ 37 பந்தில் 43 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். யசுவேந்தர சாஹல் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. தொடக்க வீரர் தவான் 62 பந்தில் 92 ரன்னும் (10 பவுண்டரி, 2 சிக்சர்), ரிசப்பன்ட் 38 பந்தில் 58 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பவுல் 2 விக்கெட்டும், தாமஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்று ‘ஒயிட்வாஷ்’ செய்தது.

    ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும். ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் தொடர் என 3 தொடரையும் இழந்தது ஏமாற்றம் அடைந்தது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    இதுபோன்ற பரபரப்பான திரில், 20 ஓவர் போட்டிகளில் நடப்பதுதான். குறிப்பாக ஐ.பி.எல். போட்டியில் இதுபோன்ற பரபரப்பு இருக்கும். அதேபோன்று இந்த போட்டி அமைந்தது. எங்களது வீரர்களின் இதுபோன்ற ஆட்டத்திறன் அதிக நம்பிக்கையை கொடுத்தது.

    நாங்கள் ஏற்கனவே 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றும் மனநிறைவு அடையவில்லை. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று விளையாடினோம். ஒரு அணியாக நாங்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது.

    நெருக்கடியான சூழ்நிலையில் எங்கள் பந்து வீச்சை மேம்படுத்த வேண்டியதும் அவசியம். இது அணிக்கு முக்கியம்.

    அணியில் விளையாடிய சிலர் இந்தியாவுக்காக அதிகம் ஆடியுள்ளனர். அதனால் அதுபோன்ற போட்டிகளில் அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு சரியான வாய்ப்பு. இந்த போட்டியில் எங்களது பீல்டிங்கும் திருப்தியை ஏற்படுத்தியது.

    அடுத்து விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய பயணம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

    தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட் கூறும்போது, “நாங்கள் கடுமையாக போராடியும் கடைசி பந்தில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையில் நாங்கள் ஒவ்வொரு அணிக்கும் சவாலாக விளங்குவோம்” என்றார்.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா செல்கிறது.

    ஆஸ்திரேலியாவுடன் மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. #INDvWI #WIvIND #RohitSharma
    Next Story
    ×