search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 கிரிக்கெட் டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்ற வாலிபர் கைது- ஏட்டு மீது வழக்கு
    X

    டி20 கிரிக்கெட் டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்ற வாலிபர் கைது- ஏட்டு மீது வழக்கு

    சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் டி20 போட்டிக்கான டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீஸ் ஏட்டு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. #INDvWI
    சென்னை, நவ.11-

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் சில தினங்களுக்கு முன்பே விற்று தீர்ந்து விட்டன. இன்று நடைபெறும் போட்டிக்காக அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருவல்லிக்கேணி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மேரி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் மைதானத்துக்கு அருகில் வைத்து டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் மேரி மடக்கி பிடித்தார். அந்த வாலிபர் ரூ.1200 டிக்கெட்டை ரூ.2000-க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் இருந்து 3 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூரை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பது தெரிய வந்தது. சென்னை, ஐதராபாத் நகரங்களில் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட விரோதமாக கிரிக்கெட் டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    பூக்கடை போக்குவரத்து போலீஸ்காரர் முத்து ஏற்பாட்டின் பேரில்தான் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக அப்துல் ரகுமான் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். போலீஸ்காரர் முத்து, இதற்கு முன் திருவல்லிக்கேணி துணை ஆணையரின் தனிப்படையில் பணியாற்றியவர் ஆவார்.



    போலீஸ்காரர் முத்து, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்று டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதற்காக திருவல்லிக்கேணி பகுதியில் லாட்ஜில் அறை எடுத்து ஆட்களை அவர் தங்க வைத்ததும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீஸ்காரர் முத்து மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்துல் ரகுமானை கைது செய்த போலீசார் முத்துவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை தேடிச்சென்றனர். ஆனால் அவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

    திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் அவரை தேடிவருகிறார்கள்.
    Next Story
    ×