search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலே டெஸ்ட்- பென் போக்ஸ் சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன் சேர்ப்பு
    X

    காலே டெஸ்ட்- பென் போக்ஸ் சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன் சேர்ப்பு

    காலேயில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் பென் போக்ஸின் அபார சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SLvENG
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டி தொடரை 1-0 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி வென்றது. இதனையடுத்து இலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பேர்ன்ஸ் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய மொயீன் அலி ரன் எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    பின்னர் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தபோதும், அறிமுக வீரரான விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் நிலைத்து நின்று விளையாடி அரைசதத்தை கடந்தார்.

    முன்னதாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் காலே மைதானத்தில் 100 விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக முரளிதரன் 111 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ரங்கனா ஹெராத்திற்கு இது கடைசி டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.



    மேலும் தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் (46 ரன்), சாம் குர்ரான் (48 ரன்), ஜோஸ் பட்லர் (38 ரன்) ஆகியோரின் உதவியுடன் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. அறிமுக வீரரான பென் போக்ஸ் முதல்நாள் ஆட்டம் முடியும்வரை ஆட்டமிழக்காமல் அணியை வழிநடத்திச் சென்றார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன் சேர்த்தது. விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 84 ரன்னுடனும், ஜேக் லீச் 14 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது ஆள் நாட்டம் தொடங்கியது. ஜோ லீச் மேலும் ஒரு ரன்கள் எடுத்த நிலையில் தில்ருவான் பெரேரா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் உடன் தில்ருவான் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    மறுமுனையில் விளையாடிய பென் போக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தனது முதல் அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 107 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
    Next Story
    ×