search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் இன்னிங்சில் 139 ரன்கள் முன்னிலைப் பெற்று வங்காளதேசத்திற்கு அதிர்ச்சி அளித்தது ஜிம்பாப்வே
    X

    முதல் இன்னிங்சில் 139 ரன்கள் முன்னிலைப் பெற்று வங்காளதேசத்திற்கு அதிர்ச்சி அளித்தது ஜிம்பாப்வே

    சியால்ஹெட்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் வங்காள தேசத்தை முதல் இன்னிங்சில் 143 ரன்னில் சுருட்டியது ஜிம்பாப்வே. #BANvZIM
    வங்காள தேசம்- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சியால்ஹெட்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க பேட்ஸ்மேன் மசகட்சா 52 ரன்களும், வில்லியம்ஸ் 88 ரன்களும் அடிக்க ஜிம்பாப்வே முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் சேர்த்தது. மூர் 37 ரன்களுடனும், சகப்வா 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சகப்வா 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, மூர் அரைசதம் அடித்து 63 எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஜிம்பாப்வே 282 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    வங்காள தேச அணியின் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பின்னர் வங்காள தேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது.

    ஜிம்பாப்வேயின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொந்த மைதானத்திலேயே வங்காள தேசம் திணறியது. லிட்டோன் தாஸ் (9), இம்ருல் கெய்ஸ் (5), மொமினுல் ஹக்யூ (11), நஸ்முல் ஹொசைன் ஷான்டோ (5), மெஹ்முதுல்லா (0) சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.



    இதனால் 19 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் வந்த முஷ்பிகுர் ரஹிம் (31), அரிபுல் ஹக்யூ (41 நாட்அவுட்), மெஹிது ஹசன் மிராஸ் (21) ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாட 143 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதனால் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 139 ரன்கள் முன்னிலைப்பெற்றது. 139 ரன்களுடன் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 1 ரன் எடுத்துள்ளது. இதுவரை ஜிம்பாப்வே 140 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    2-வது இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் சேர்த்தால் வங்காள தேச அணிக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாக வாய்ப்புள்ளது.
    Next Story
    ×